சாலை அமைப்பதில் கோடி கணக்கில் ஊழல்; செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

MR Vijaya Baskar corruption complaint against Senthil Balaji: கரூர் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கோடி கணக்கில் ஊழல் செய்துள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்பாட்டம் நடத்தியது. இதில் கரூர் மாவட்டத்தில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

பின்னர், கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அழைத்துச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் – ஈசநத்தம் சாலை தற்போது போடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளதையும், இதே போல், வால்காட்டுப்புதூர், சுக்காலியூர் – ஈசநத்தம் – கரூர் மூன்று வழிசாலைகள், புகளூர் இ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை செல்லும் சாலை, மண்மங்கலம் – நன்னியூர் புதூர் ஆகிய சாலைகளும், வேலாயுதம்பாளையம் பகுதியில் சில சாலைகளும் சேர்த்து ரூ.4 கோடி அளவில் மொத்தமாக ரூ.10 கோடி அளவில், தார்சாலைகள் புதிதாக போடப்பட்டதாக கணக்கு காட்டி பணம் எடுத்துள்ளதாகவும், இந்த சாலைகள் ஏற்கனவே தரமாக உள்ளதாகவும் கூறினார்.

ஆங்காங்கே அந்த சாலைகளை ஆதாரப்பூர்வமாக காட்டி, ஏற்கனவே போடப்பட்ட சாலைகளுக்கு தான் இந்த புதிய சாலை என்ற பெயர் வைத்து அதற்கான பணத்தினை பெற்றுள்ளனர் என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாவட்ட அளவில் திமுக ஆட்சி அமைத்த 10 மாத காலத்தில் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. உதாரணத்திற்கு, ஏற்கனவே போடப்பட்ட தார்சாலைகளை மீண்டும் போடப்பட்டதாக கூறி ரூ.10 கோடிக்கு மேல் அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்: டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

கரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்தின் அலுவலகமாக மாறி உள்ளது. ஓய்வு பெற்ற இரண்டு நபர்களை அந்த அலுவலகத்தில் வைத்து கொண்டு தற்போது ஆங்காங்கே டெண்டர்களில் குறுக்கிட்டு வருகின்றார். எந்த ஒரு டெண்டராக இருந்தாலும் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்திடம் பாஸ் செய்தால் மட்டும் செல்லும் என்ற நிலை உள்ளது. தனி ஒரு நபர் கரூர் மாவட்டத்தினையே ஆட்சி செய்து வருகின்றார். இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரிந்து தான் நடந்து வருகின்றது, கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை எம்.சி.எஸ்.சங்கர் அமைச்சர் போல் செயல்படுகிறார். இதே போல், குட்கா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மெஸ் மணி என்பவர் சவுடு, கிராவல் மண் காண்ட்ராக்டுகளை மொத்தமாக எடுத்துள்ளார்.

அதிமுக கட்சி கவுன்சிலர்கள் திமுகவிற்கு மாறவில்லை என்றால் காவல்துறையை வைத்து கஞ்சா கேஸ், குட்கா கேஸ் ஆகியவைகளை போடுவதாக கூறி, அவர்களை திமுகவிற்கு கட்டாயமாக மாற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் மனு அளித்தும் எந்த வித பயனுமில்லை,” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.