சாத்தூர் அருகே கர்ப்பிணி எரித்துக் கொலையா? – பெண் வீட்டார் புகார்; ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட நல்லாம்பட்டி சேர்ந்தவர்கள் தர்மராஜ் – முருகேஸ்வரி தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு சின்னக்கருப்பசாமி என்ற மகனும் முருகலட்சுமி(19) என்ற மகளும் உள்ளனர். தர்மராஜ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். கணவரின் மறைவுக்குப்பின் இரண்டு பிள்ளைகளையும் உறவினர்களின் ஒத்துழைப்புடன் வளர்த்து ஆளாக்கிய முருகேஸ்வரி, தனது மகள் முருகலட்சுமியை பக்கத்து ஊரான நாருகாபுரத்தைச் சேர்ந்த ஜான்பாண்டியன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

முருகலட்சுமி

இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முருகலட்சுமி உடலில் தீக்காயங்களுடன் நாருகாபுரத்திலுள்ள அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து இருக்கன்குடி போலீஸார், தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் முருகலட்சுமி இறந்திருப்பதால் வழக்கு விசாரணை சாத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், மாப்பிள்ளை வீட்டார்கள் தனது மகளை அடித்துக்கொன்றுவிட்டு தற்கொலை செய்தது போன்று நாடகமாடுகிறார்கள் என குற்றஞ்சாட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மனு அளித்தனர் இளம் பெண்ணின் குடும்பத்தினர்.

இதுதொடர்பாக முருகலட்சுமியின் அண்ணன் சின்னக்கருப்பசாமியிடம் பேசினோம், “எங்க வீட்ல அப்பா இறந்ததுக்கு பின் அவளுக்கு அப்பா நினைப்பு வரக்கூடாதுன்னு ரொம்ப பாசமா பார்த்துகிட்டோம். அவள் என்ன கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து சந்தோசபடவச்சி பாக்குறதுதான் எனக்கு சந்தோசம். அவளும், எனக்கு இதுவேணும், அதுவேணும்னு கேக்குற ஆளு கிடையாது சார். குடும்ப சூழ்நிலை தெரிஞ்சி ரொம்ப பக்குவமா நடந்துக்குற பொண்ணு. விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செஞ்சுகிட்டு நர்சிங் படிச்சப்போதான் பக்கத்து ஊரை சேர்ந்த ஜான்பாண்டியனுக்கும் அவளுக்கும் பழக்கம் ஏற்பட்டுருக்கு. அதுவும் எதேச்சையா நடக்கல. ஜான்பாண்டியனோட உறவுக்கார பொண்ணு எங்க ஊர்ல இருக்குது. அந்த பொண்ணு மூலமா என் தங்கச்சிய தெரிஞ்சுகிட்ட அவன், என் தங்கச்சிய ‘லவ்’ பண்றதா சொல்லி உறவுக்கார பொண்ண தூதுவிட்டுருக்கான். அதுக்கு அப்புறம் ஜான்பாண்டியனும், என் தங்கச்சியும் லவ் பண்ணினாங்க. இந்த விஷயம் எங்க ரெண்டு பேர் வீட்டுக்கும் தெரியவந்துச்சு.

சின்னக்கருப்பசாமி

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே ஜான்பாண்டியனை பிடிக்காது. அதனால அவங்க வீட்டாளுக எங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டப்ப என் தங்கச்சிய நான் கட்டிக் கொடுக்க மாட்டேனுதான் சொன்னேன். ஆனா என் தங்கச்சி தான் விடாப்பிடியாய் இருந்துச்சி. “எனக்கு அவனை புடிச்சிருக்கு அண்ணே.., என்னை அவனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடு, நான் நல்லா இருப்பேன்.. என் சந்தோஷமா இருக்கத்தான நீ ஆசைப்படுற. அதனால யோசிக்காத அண்ணே. அவனுக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்கொண்டு நிச்சயம் நீ வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்காதுன்னு” என் கைய புடிச்சு சொன்னா. அந்த நம்பிக்கையில்தான் நான் அங்க ரெண்டு பேரோட காதல் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.

கல்யாணத்துக்கு ரெண்டு வீட்டிலேயே உட்கார்ந்து பேசும்போது தான் அவங்க வீட்டோட உண்மையான சுயரூபம் எனக்கு மெல்ல தெரிஞ்சுது. பொண்ணு கேட்டு வந்த வரைக்கும், எங்களுக்கு எதுவுமே வேண்டாம் உங்க பொண்ணு மட்டும் கொடுங்கன்னு கேட்டவங்க, கல்யாண பேச்சுக்கு ரெண்டு வீட்டிலேயும் உட்கார்ந்திருக்கும்போது பொண்ணுக்கு வரதட்சணையா 10 பவுன் நகையையும், மாப்பிள்ளை அழைப்புக்கு 2 பவுன் நகையும் வேணும்னு கேட்டாங்க. எங்க குடும்பம் அவ்வளவு வசதிலாம் கிடையாது. அதனால எங்களால முடிஞ்சதை செய்றேன்னு சொல்லிருந்தோம்.

திட்டமிட்டபடி கடந்த டிசம்பர் 13 -ம் தேதி என் தங்கச்சிக்கும், ஜான்பாண்டியனுக்கும் கல்யாணம் நடந்துச்சு. கல்யாண வரதட்சணையா 7 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 2 பவுன் நகையும் குடுத்தோம். கொஞ்ச நாள்தான் அவ சந்தோசமா இருந்திருப்பானு நினைக்கிறேன். அதுக்குபின்ன வரதட்சனை கேட்டத்துல மிச்சம் உள்ள 3 பவுன் நகையை எப்ப வாங்கிட்டு வருவேன்னு கேட்டு தங்கச்சிய தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுருக்காங்க போல. இந்தசமயத்துல தான் என் தங்கச்சி 3 மாச கர்ப்பமா இருக்கானு எங்களுக்கு தெரிஞ்சுது. அதுகப்புறம் அடிக்கடி வீட்டுக்கு வருவா, அப்பல்லாம் அவ மனசு சங்கடத்தோடத்தான் வந்துருகான்னு எங்களுக்கு தெரியாது.

கேட்கும்போது சும்மா வந்தேன், உங்களைத் தேடுச்சு அதனால பார்த்துட்டுப் போக வந்தேன்னு தான் சொன்னா. அந்த சமயத்துலலாம் கல்யாணத்துக்கு போடறதா சொன்ன மீதி 3 பவுன் நகையை எப்பம்மா தருவனு எங்ககிட்ட நாசூக்கா கேப்பா. இது ஒரு பெரிய பிரச்னை ஆகும்னு அப்ப எங்களுக்கு தெரியாது. நாங்க எங்க வீட்டு சூழ்நிலைய எடுத்துச் சொல்லி கொஞ்சம் பொறுத்துக்கம்மானு சமாதானப்படுத்தி தான் அனுப்பிவைப்போம். இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாருகாபுரத்தில் உள்ள கோயிலில் திருவிழா நடந்துச்சு. இந்த திருவிழாவுக்கு வாங்கனு எங்களையும் கூப்பிட்டுருந்தா. என் தங்கச்சி சாகறதுக்கு முதல் நாளான சனிக்கிழமை கூட எங்க சொந்தக்காரங்ககிட்ட வீடியோக்கால் பேசி நல்லா இருக்கேன்னு சொல்லிருக்கா. ஆனால் அதுக்கு மறுநாளே என் தங்கச்சி என்னை விட்டு போய்விடுவானு யாருக்கும் தெரியாம போச்சே” எனச்சொல்லும் போதே அவரின் குரல் விம்மிப்போனது.

முருகேஸ்வரி

தொடர்ந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து பேசினோம், “சனிக்கிழமை இரவு கரகாட்டம், சாமக்கொடை விழாவை முடிச்சிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் 3 மணிக்கு எங்க சித்தப்பா, தங்கச்சி முருகலட்சுமிய பாக்க அவங்க வீட்டுக்கு போயிருக்காங்க. அப்போ அவங்க வீட்டுல என் தங்கச்சி மாப்ள ஜான்பாண்டியன், அவருடைய அப்பா அந்தோணி, அம்மா தாயம்மாள், தம்பி அருண், அக்கா பிரியா, அவங்க கணவர் மாரிக்கண்ணன், எல்லாரும் இருந்திருக்காங்க. தங்கச்சிய பாக்கணும்னு சொல்லி சித்தப்பா கேட்டதுக்கு நைட்டு சாமக்கொடை பார்த்த அசதில ரெண்டாவது மாடியில தூங்கிட்டு இருக்கானு, பதில் சொல்லி சமாளிச்சிருக்காங்க. சரி தூங்குற பிள்ளையை எழுப்ப வேண்டாம்னு எழுந்ததும் சித்தப்பா வந்திட்டு போனதா சொல்லுங்கன்னு மட்டும் சொல்லிட்டு திரும்பி வந்துட்டாங்க.

அதிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள்ள எங்களுக்கு தகவல் வருது… சாயந்திரம் 5 மணி அளவில் அவங்க வீட்ல இருந்து போன் வந்துச்சு. போன் அட்டென்ட் பண்ணி பேசும்போது என் தங்கச்சி காயப்போட்டிருந்த துணியை எடுக்கப்போன இடத்துல கரண்ட் ஷாக் அடிச்சி இறந்துட்டானு சொன்னாங்க. அதைக்கேட்ட உடனே, எங்க அம்மா “அய்யோ, அம்மானு அலறிக்கிட்டு வாயிலும் வயிறிலும் அடிச்சிக்கிட்டு அழுதுகிட்டே நாருகாபுரத்துக்கு புறப்பட்டாங்க. அங்க போறதுக்குள்ள போலீஸூம் வந்துட்டு. அங்க இருந்த போலீஸ், என் தங்கச்சி முகத்தை பார்க்கக்கூட எங்களை விடல. நாங்க, ஏன் எதுக்குன்னு கேட்கும் போது உடம்பு புல்லா எரிஞ்சிட்டுனு சொன்னாங்க. அவள தூக்கிட்டு போறப்போ முகத்தை மட்டும் விலக்கி எங்களுக்கு காமிச்சாங்க. மத்தபடி அவளை தொட்டு அழ கூட எங்களை அனுமதிக்கல.

ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு பண்ணிட்டுருக்கும்போது தான் எங்க சித்தப்பா தங்கச்சிய பார்க்கப்போன சமயத்துல அந்த ஊர்ல கரண்ட் கிடையாதுன்னு எங்களுக்கு தெரியவந்துச்சு. ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியிலிருந்து சாயந்திரம் 6 மணி வரைக்கும் நாருகாபுரத்தில் கரண்ட்டு கிடையாது. அப்படி இருக்கும்போது என் தங்கச்சி எப்படி கரண்ட் ஷாக் அடிச்சி இறந்திருப்பா. இதை உறுதிப்படுத்த இ.பி. ஆபீஸ்ல எங்களுக்கு தெரிஞ்சவர்கிட்ட கேட்டோம். அவரும் நாருகாபுரத்துல என் தங்கச்சி கரண்ட் ஷாக்ல இறந்ததா சொன்ன நேரத்துல கரண்டு கிடையாதுனு உறுதியா சொன்னாரு. அதேசமயம் கரண்ட் ஷாக் அடிச்சா யாருக்கும் உடம்பு எரியிற அளவுக்கு மோசமா இருக்காதுனு சொன்னாங்க.

தீ

என் தங்கச்சியோட உடல் முன்பாகம் மட்டும்தான் தீக்காயங்களுடன் எரிஞ்சிருந்துச்சு. பின்தலை முதுகுப்பகுதிலாம் தீக்காயங்கள் அவ்வளவா கிடையாது. அதுமட்டுமல்லாமல் ஜான்பாண்டியன் வீட்டு ஆளுக என் தங்கச்சி சாகறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்க இருக்குற பெட்ரோல் பங்கில் ஒரு கேனில் பெட்ரோல் வாங்கிருக்காங்க. இத அங்க பெட்ரோல் போட நின்னுக்கிட்டிருந்த எங்க ஊர்க்காரங்களும் பாத்திருக்காங்க. என் தங்கச்சி இறந்த சமயத்துலத்தான் ஜான்பாண்டியனோட அக்கா பிரியாவுக்கு முழங்கையில தீக்காயம் ஏற்பட்டிருக்கு. இதையெல்லாம் வச்சி பார்க்கும்போது என் தங்கச்சிய அவங்க அடிச்சி கொன்னு பெட்ரோல் ஊற்றி எரிச்சிருக்காங்கனு தோணுச்சு. அந்தசமயமே, பிரேதப்பரிசோதனை பண்ண கையெழுத்துப்போட மாட்டோம்னு சொல்லி நாங்க கிளம்பிட்டோம். ஆனால் ஜான்பாண்டியன் வீட்டு ஆளுக கையெழுத்து போட்டு பிரேத பரிசோதனை பண்ணிருக்காங்க. என் தங்கச்சி சாவில் மர்மம் இருக்கு, அவள கொலை செஞ்சிருக்காங்க முறையா விசாரணை நடத்துங்கனு கேட்டு இருக்கன்குடி போலீஸ்ல புகார் கொடுத்தோம். ஆனால் ஒப்புக்காக ஒரு புகார் எழுதி தற்கொலைனு போலீஸ் வழக்குப்பதிவு பண்ணினாங்க.

இந்தநிலையில பிரேத பரிசோதனை நடந்ததுக்கு பிறகு உடலை வாங்கிட்டு போங்கன்னு போலீஸ் எங்களை ரொம்ப வற்புறுத்தினாங்க. ஆனா, எங்க வீட்டு பொண்ணு எப்படி இறந்தானு தெரியாம அவ உடல நாங்க வாங்கப்போறதில்ல. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு கட்சிப்பலம் இருக்கு. ஏனா, மாப்பிள்ளையோட அப்பா அந்தோணி, திமுக கட்சில முக்கியப்பொறுப்புல இருக்காரு. இதுதவிர அவங்களுக்கு சொந்தமா லாரி, அட்டை மில் எல்லாம் இருக்கு. நிறைய பணம் வெச்சிருக்காங்க. அதனால எங்களால நேரடியா அவங்கக்கூட மோத முடியல. நியாயம் கேட்டு அவங்க வீட்டுக்கு போகலாம்னு நினைச்சா ஊர்காரங்க எல்லாரும் ஒன்னுக்கூடி எங்கள ஊருக்குள்ளேயே விடமாட்டிக்காங்க. எங்களுக்கு சாமிதான் நீதிய தரணும்” என்றார் ஆதங்கத்துடன்.

தற்கொலை

சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பாவிடம் பேசினோம்,

“திருமணமான 5 மாதத்தில் பெண் இறந்தது தொடர்பாக புகார் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டாரிடமும், மாப்பிள்ளை வீட்டாரிடமும் விசாரணை நடத்தி உள்ளோம். மேலும் வரதட்சணை கொடுமை உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை நிறைவு பெற்றதும் அறிக்கை தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். அதன் அடிப்படையில் வழக்கின் பாதையை காவல்துறையினர் முடிவு செய்வார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.