`நாகாலாந்துல நாய்க்கறி சாப்பிடுவாங்களாம், பார்த்துக்கப்பா!' – வழியனுப்பிய குரல்கள் – Back பேக் – 2

இரண்டு மணிநேரத் தூக்கத்துக்குப் பிறகு 12.30 மணிவாக்கில் எழுந்தேன். அந்த குட்டித்தூக்கம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது. எல்லாமே புதிதாகத் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் நண்பன் மனோஜிடமிருந்து அழைப்பு வந்தது. நாகாலாந்து செல்கிறேன் என முகநூலில் பதிவிட்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் கூப்பிடுகிறான் என்பது புரிந்தது. பயணத்தைப் பற்றிய விசாரிப்புகள் மற்றும் தனிப்பட்ட கதைகளையெல்லாம் பேசி முடித்த பின்பு “பார்த்து ஜி… நாகாலாந்துல நாய்க்கறியை மிக்ஸ் பண்றாங்களாம்… அதனால வெஜிடேரியன் ஹோட்டல்லயே சாப்பிடுங்க” என்றான். “இது என்னடா புதுப்புரளியா இருக்கு” என்று நினைத்துக் கொண்டேன். அவனது அழைப்பைத் துண்டித்த சில நிமிடங்களில் என் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது. அவரும் சொல்லி வைத்தாற்போல் “நாகாலாந்துல நாய்க்கறிதான் சாப்பிடுவாங்களாம்… பார்த்துக்க” என்றதும் சிறு அதிர்ச்சிக்குள்ளானேன். “உங்களுக்கு யார் சொன்னா?” என்று கேட்டேன். “நம்ம கடைக்கு வந்த நாகாலாந்து பசங்கதான் சொன்னாங்க” என்றார்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது. எங்கள் ஊரில் இயங்கி வரும் கல்விக்குழுமத்தில், பொறியியல் மற்றும் டிப்ளோமா படிப்புகளுக்கு வட கிழக்கு மாநிலங்களில் இருந்து நிறைய மாணவர்கள் படிக்க வருகிறார்கள். ஊருக்குள் அவ்வப்போது அந்த வடகிழக்கு முகங்கள் தட்டுப்படும். நான் அக்கல்விக்குழுமத்தில் ஐடிஐ ஓராண்டு படித்தேன். அப்போது நடைபெற்ற ஆண்டு விழாவில் நாகாலாந்து மாணவர்கள் அவர்களது பாரம்பர்ய நடனத்தை ஆடினர். கிழவர்கள் ஒன்று கூடி தங்களது கடந்த காலத்தின் இனிமைகளைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருப்பெற்றதுதான் அப்பாடலும் நடனமும் என சொன்னார்கள். இவையெல்லாம் நினைவுக்கு வந்து செல்ல, நாய்க்கறி தொடர்பான செய்தி இதுவரையிலும் என் செவிகளை எட்டவில்லையே… என்ன காரணம் யார் செய்த தாமதம் என உடனே கூகுளில் தேடினேன்.

ரயில்

விலங்குகள் நலனை அடிப்படையாகக் கொண்டு 2020ம் ஆண்டு நாகாலாந்து அரசு நாய்க்கறியை இறக்குமதி செய்யவும் வணிகம் செய்யவும் தடை விதித்துள்ள செய்தியைப் படித்தேன். திமாபூரில் புதன்கிழமை நாய்க்கறிக்கான சந்தை நடைபெற்று வருவதாகவும், அசாமிலிருந்து நாகாலாந்துக்கு நாய்க்கறி கொண்டு வரப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கடுத்து நாகாலாந்து அரசின் நாய்க்கறித் தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக கௌஹாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள செய்தியைப் படித்தேன்.

எந்த ஒரு சமூகத்தின் உணவுப்பழக்கத்தையும் விமர்சிக்கிற, கேள்வி கேட்கிற உரிமை இங்கே எவருக்கும் இல்லை என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். மாட்டுக்கறி, பன்றிக்கறி மட்டுமல்லாத பல வகையான இறைச்சிகளை உண்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு நாய்க்கறி சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் சிறிதளவு கூட உண்டாகவில்லை. அந்த உணவுப்பழக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே நிரம்பியிருந்தது. நாகாலாந்து சென்றதும் இது குறித்த விசாரணையில் இறங்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

மதிய உணவுக்கான நேரம் வந்தது. ரயில்வே கேன்டீன் உணவுகளை வரிசையாக விற்றுக்கொண்டு வந்தார்கள். மீல்ஸ், சிக்கன் பிரியாணி, அண்டா (முட்டை) பிரியாணி என அலுமினியம் ஃபாயிலில் அடைக்கப்பட்ட உணவுகள் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தன. எதிரே அமர்ந்திருந்த பெங்காலி அவன் வெளியே வாங்கி வந்த பார்சலைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தான். என்னிடம் சாப்பிடுவதற்கான எத்தனிப்பே இல்லை… இருந்தும் பசி. எதையாவது தின்று உயிர் வாழ வேண்டும் என்கிற உயிரினப் பண்பின் அடிப்படையில் மீல்ஸ் ஆர்டர் செய்தேன். 110 ரூபாய் வாங்கினார்கள். நூறு ரூபாய் போய் ஒழியட்டும் 10 ரூபாய்க்காவது கொஞ்சமே கொஞ்சம் சுவை கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆந்திரா மெஸ்ஸின் அன்லிமிடெட் மீல்ஸில் மோர்க்குழம்புக்காக வாங்கிச்சாப்பிடுகிற அளவு சாப்பாடுதான் இருந்தது. ருசிதான் இல்லை பசியாறினால் போதும் என்று நினைத்தேன் ஆனால் அரை வயிறு மட்டுமே நிரம்பியது.

Train

சாப்பிட்டு முடித்த தட்டுகளாகட்டும் எந்தக் குப்பைகளாகட்டும் ஜன்னல் வழியாக விட்டெறிந்து கொண்டிருந்தனர். நான் பெட்டியின் முனையில் வாஷ் பேசினின் கீழ் இருந்த குப்பைத்தொட்டியில் சாப்பிட்ட தட்டைப் போட்டேன். கை கழுவலாம் என குழாயைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தால் தண்ணீர் வரவில்லை. கழிவறைக்குச் செல்லலாம் என உள்ளே நுழைந்த மாத்திரத்தில் வெடுக்கன வெளியே வந்தேன். குமட்டலைக் கட்டுபடுத்திக் கொண்டு அடுத்த பெட்டிக்குச் சென்றேன். அங்குள்ள கழிவறையில் தண்ணீர் வந்தது. கை கழுவி விட்டு முகம் கழுவினேன். ரயில் பயணத்தில் கழிவறைப் பயன்பாட்டில்தான் நமக்கு உச்சபட்ச சகிப்புத்தன்மை தேவைப்படும். சுகாதாரமின்றி அக்கழிப்பறைகள் இருக்கும். இதற்கு ரயில்வே துறையை முற்று முழுதாக குறை சொல்லக்கூடாது. பயணிகளின் பொறுப்புணர்வையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். கழிப்பறைக் குழியில் மதுபாட்டிலைப் போட்டு வைத்திருப்பதையெல்லாம் பார்த்திருக்கிறேன். கை கழுவுகிற சிங்க்கில் பான் எச்சிலைத் துப்பி வைத்திருப்பார்கள். பெண்கள் மேலும் இடர்களுக்கு ஆளாவார்கள். “காசு போனாலும் பரவால்ல… அடுத்தவாட்டியெல்லாம் 3 ஏசி புக் பண்ணி வரணும்” என்று நினைத்துக் கொண்டேன்.

மெள்ள ஊர்வதும், விரைவுவதுமாய் ரயில் சென்று கொண்டிருந்தது. ராக் ஸ்டார், தமாஷா என ரஹ்மான் ஆல்பங்களைக் கேட்க ஆரம்பித்தேன். இரவு உணவை விசாகப்பட்டினத்தில் சாப்பிடுவதென திட்டமிட்டிருந்தேன். அங்கு ரயில் 20 நிமிடங்கள் நிற்கும் என்பதால் ரயிலை விட்டு இறங்கிச்சென்று உணவு வாங்கி வரலாம். ஒரே இடத்தில் 12 மணிநேரம் உட்கார்ந்து வருவதற்கு சற்றே இளைப்பாறுதலாக இருக்கும் என்று நினைத்தேன். 9.25க்கு விசாகப்பட்டனம் செல்ல வேண்டிய ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 10.30 மணி வாக்கில்தான் சென்றது. ரயிலை விட்டு இறங்கி நடந்தேன். மடக்கி வைத்து அமர்ந்ததன் விளைவாக மரத்துப் போயிருந்த காலை ஊன்றி நடக்க சற்று சிரமப்பட வேண்டியிருந்தது. கைகளை நீட்டியும், தலையைத் திருப்பியும் நெட்டி முறித்தேன்.

Train Platform

இன்றைய ஆந்திரத்தின் மிகப்பெரிய நகரத்தின் விஸ்தாரமான ரயில் நிலையம் அது. நடைமேடையிலும் ரயில்வே கேன்டீன்காரர்களே உணவு விற்றுக் கொண்டிருந்தனர். கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு ஓர் உணவகம் தென்பட்டது. அங்கு சென்று சப்பாத்தி வாங்கி வந்து சாப்பிட்டேன். மீண்டும் இளையராஜாவுக்குத் திரும்பினேன். அவரது மெல்லிசைப் பாடல்களைக் கேட்கக் கேட்க தூக்கம் சொருகிக்கொண்டு வந்தது. அப்படுக்கையின் பங்காளியான பெங்காலி அவனது பாதி படுக்கையில் உடலைக் குறுக்கிப் படுத்துக் கொண்டான். எனக்கும் அப்படிப் படுத்தால் தேவலாம் என்றிருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து ஏக்கப் பெருமூச்சு விட்டேன். “எனக்குன்னு வருவீங்களாடா” என என் பேக்பேக்கை கேட்க வேண்டும் போலிருந்தது.

திரிவோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.