இலங்கையில் மக்கள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு: அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க, இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் படுகாயமடைந்தனர்.

கொழும்புவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரம்புக்கனா நெடுஞ்சாலையில் இன்று திரண்ட போராட்டக்காரர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எரிபொருள் தட்டுப்பாட்டு தீர்வு காணாத அரசைக் கண்டிக்கும் வகையில், வாகன ஓட்டிகள் டயர்களை எரித்து தலைநகருக்குச் செல்லும் முக்கிய சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெற்ற நெடுஞ்சாலை, மத்திய நகரான கண்டியை தலைநகர் கொழும்புடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாகும்.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது இலங்கை காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர். இதனை இலங்கை காவல்துறையும் உறுதி செய்துள்ளது.

இந்தப் போராட்டம் கும்பல் வன்முறையாக மாறி, காவலர்கள் மீது மக்கள் கற்களை வீசியதால் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சுற்றுலாத் துறை முடங்கியது. இதனால் அந்நாட்டின் வருவாய் சரிந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் சரிந்ததாலும், கடன் நெருக்கடியாலும் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குகூட நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உணவுப்பொருள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, இலங்கை அமைச்சரவையை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று விரிவாக்கம் செய்தார். 17 பேரை புதிய அமைச்சர்களாக நியமித்தார். அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.