இலங்கையில் அதிபர் கோத்தபய ஆட்சிக்கு முடிவு? எதிர்க்கட்சி மசோதா தாக்கல்| Dinamalar

கொழும்பு,: இலங்கையில் அதிபர் ஆட்சி முறைக்கு முடிவு கட்டி, ஜனநாயக அரசை ஏற்படுத்தும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதாவை, முக்கிய எதிர்கட்சி ஒன்று பார்லி சபாநாயகரிடம் வழங்கி உள்ளது.

நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது திறனற்ற அரசும் தான் காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் முக்கிய எதிர்கட்சியான சமாகி ஜன பலவேகயா, அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா ஒன்றை பார்லி சபாநாயகரிடம் வழங்கி உள்ளது. இது குறித்து சமாகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா கூறியதாவது:

இலங்கையில் அதிபர் ஆட்சிமுறைக்கு முடிவு கட்டி, அரசியல் சாசனப்படி ஜனநாயக அரசு ஆளுவதற்கு வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, பார்லி., சபாநாயகரிடம் வழங்கியுள்ளோம். இந்த மசோதாவின்படி இலங்கை மற்றும் முப்படைகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி வகிப்பார். ஆனால், அவர் பிரதமரை நியமிக்கவோ அல்லது நீக்கம் செய்யவோ முடியாது. பிரதமர் பரிந்துரைப்பவர்களை மட்டுமே ஜனாதிபதியால் நியமிக்க முடியும். இந்த சட்ட திருத்த மசோதா பார்லியில் நிறைவேறினால், அதிபர் ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வரும்இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில், 2015ல் அதிபரின் அதிகாரத்தை குறைத்து பார்லி.,க்கு சர்வ வல்லமை வழங்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்சே குடும்பம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், மீண்டும் அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட தன் குடும்பத்தினரை ஆட்சியில் பங்கேற்கச் செய்தார். தற்போது மக்கள் போராட்டம் காரணமாக, புதிய அரசில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர்த்து தன் குடும்பத்தினர் யாருக்கும் கோத்தபய ராஜபக்சே இடம் அளிக்கவில்லை.

இந்தியா உதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்து பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. இந்நிலையில், 40 ஆயிரம் டன் டீசலை, இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு ரத்து

கடந்த வாரம், இலங்கையில் ரம்புக்கெனா நகரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. நேற்று அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது. போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.