எங்களையா டிரான்ஸ்பர் பண்றீங்க.. மாணவிகளை கடத்திய டீச்சரம்மாக்கள்.. உ.பியில் பகீர்!

உத்தரப் பிரதேச மாநிலம்
லக்கிம்பூர் கேரி
மாவட்டத்தில் தங்களது இடமாறுதலை ரத்து செய்யக் கோரி 24 மாணவிகளை கடத்தி பள்ளிக்கூடத்திலேயே பிணைக் கைதிகளாக வைத்த 2 டீச்சர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

பேஜாம் என்ற இடத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிக்கூடத்தில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் அந்த மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரு ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து லக்கிம்பூர் கேரி மாவட்ட கல்வி அதிகாரி லட்சுமிகாந்த் பாண்டே கூறுகையில், தங்களை வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்ததை அடுத்து அந்த இரு டீச்சர்களும் கோபமடைந்துள்ளனர். அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து இடமாறுதலை ரத்து செய்ய வைப்பதற்காக இந்த மோசமான வேலையில் இறங்கினர்.

எனக்கும், மாவட்ட மகளிர் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரேணு ஸ்ரீவத்சவாவுக்கும், பள்ளிக்கூட விடுதி வார்டன் லலித் குமாரி தகவல் கொடுத்ததும் நாங்கள் விரைந்து சென்றோம். போலீஸ் உதவியுடன் மாணவிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தோம் என்றார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களது பெயர்கள் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்தி கத்தியார் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது விசாரணை நடத்த கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.