பாலிவுட் படத்தில் நடிக்கிறார் டெண்டுல்கர் மகள் சாரா| Dinamalar

மும்பை : சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, ‘பாலிவுட்’ படத்தில் விரைவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வரும், முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி தம்பதியின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.இதற்கிடையே, சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர், 24, மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்து அசத்தினார்.

இந்த விளம்பரம் தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்தன. ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலை தளத்தில் சாராவை, 18 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிப்பில் அதிக ஆர்வம் உடைய சாரா, இதற்காக நடிப்பு பயிற்சி எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், ஹிந்தி திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.