பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றி! உலக தலைவர்களிடம் இருந்து குவியும் வாழ்த்து!!

பாரிஸ்,
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றதற்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று வெளியிடப்பட்ட பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் 58.8 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். 

இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின், சுவீடன், ருமேனியா, லிதுவேனியா, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் குட்ரெஸ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி என பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துகள். உக்ரைன் பிரச்சினை, காலநிலை மாற்றம் உட்பட பல பிரச்சினைகளில் எங்கள் தொடர் நெருங்கிய ஒத்துழைப்பை நாங்கள் தொடருவோம் என்பதை எதிர்நோக்கி உள்ளேன்” என்றார்.
ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “எங்கள் நல்ல ஒத்துழைப்பை நாங்கள் தொடருவோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துகள். பிரான்ஸ் எங்களது நெருங்கிய மற்றும் மிக முக்கியமான கூட்டாளிகளில் ஒன்று. பிரான்சுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.
கனடா பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கனடா மற்றும் பிரான்சில் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகளில் எங்களது பணியை மேலும் தொடர எதிர்பார்க்கிறோம் . குறிப்பாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பணிகளை மேலும் தொடர எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.