அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம்: சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வு – பிரதமர்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வலுவற்றதாக்கி, 19ஆவது திருத்தத்தில் தேவையான மற்றும் காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டு அமுல்படுத்துவதே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கான நடைமுறை சாத்தியமிக்க தீர்வாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையின் முதலாவது அமர்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (26) இடம்பெற்றது.

இதன் போது இது தொடர்பான ஆலோசனையை பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்தார். திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்க பிரதமர் அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார்.

2020ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு அறுதிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான விவாதம் தற்போது சமூகத்தில் பெரியளவில் உருவாகி உள்ளதாக, பிரதமர் அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை சமாளிப்பதற்காக பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பல்வேறு தரப்புக்களினதும் கருத்தாகும். அதனால் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டினார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றுக்கு வருவதற்காக சீனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான யோசனை ஒன்றையும் பிரதமர் நேற்று அமைச்சரவைக்கு முன்வைத்தார்.

2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீன இலங்கை கலந்துரையாடல் ஆறு சுற்றுக்களின் பின்னர் 2017ஆம் ஆண்டில் தடைப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்புக்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் மற்றும் இணக்க குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.