பெருங்குடி குப்பைக் கிடங்கில் 2-வது நாளாகக் கொழுந்துவிட்டு எரியும் தீ… போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது. 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில் 34 லட்சம் கனமீட்டர் அளவில் குப்பைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 5,000 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இங்கிருக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியும் இந்தக் கிடங்கில் நடைபெற்றுவருகிறது.

பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

இதில், குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள மற்ற குப்பைகள் பெருங்குடி கிடங்குகளில்தான் கொட்டப்படுகின்றன. இந்தக் கிடங்கில் உள்ள குப்பைகள் `பயோ மைனிங்’ முறையில் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் தான் சென்னை மாநகர மேயர் பிரியா இந்த குப்பைக் கிடங்கில் நடைபெற்றுவரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், நேற்று மாலைக் குப்பைக் கிடங்கில் உள்ள உரம் தயாரிக்கும் இடம் அருகே எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு இடத்தில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த கிடங்கு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

திறந்தவெளி கிடங்கு என்பதால், ஒரு இடத்தில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள இடங்களுக்கும் மளமளவென்று பரவத்தொடங்கியது. தற்போதைய நிலையில், தீயானது 15 ஏக்கருக்கும் அதிகமாகப் பரவியிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை முதல் தற்போது வரை தீயணைப்புத்துறையினர் கடுமையாகப் போராடியும்… தீயைக் கட்டுப்படுத்த முடியாத சூழல்தான் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கிருந்த குப்பைகளில் தீ பற்றியது காரணமாக உருவான புகை அந்த சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் பரவியிருக்கிறது. புகையால் அந்தப் பகுதி மக்கள் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டப் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். திறந்தவெளிப் பகுதி என்பதால் தீயைக் கட்டுப்படுத்துவது தீயணைப்புத்துறையினருக்கு கடும் சவாலாக இருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் இடத்தில், நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மாநகராட்சி உயர் அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், மின்சாரத்துறை அதிகாரிகள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெருங்குடிக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

இரண்டாவது நாளாகப் பற்றியெரியும் தீ காரணமாகப் பெருங்குடி பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. குவித்துவைக்கப்பட்டிருக்கும் குப்பைகளில் பற்றிய தீ அணைக்கப்பட்டிருந்தாலும், அந்த குப்பைகளின் உள்ளே பற்றிய தீ காரணமாக அதிகளவு வெண் புகை வெளியேறிவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.