மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கணவன் – வரதட்சணை தராததால் ஆத்திரம்

வரதட்சணை தராததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை உறவினர்கள் மூலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் கபூர். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் பேசிய போது, மாப்பிள்ளைக்கு 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்க பெண்ணின் பெற்றோர் சம்மதித்ததாக தெரிகிறது. ஆனால், திருமணத்தின்போது மூன்றரை லட்சத்தை மட்டுமே பெண்ணின் பெற்றோரால் தர முடிந்திருக்கிறது.
image
மீதி பணமான ரூ.1.5 லட்சத்தை பிறகு தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கூலி வேலை செய்யும் பெண்ணின் தந்தையால் உடனடியாக அந்த பணத்தை கொடுக்க முடியவில்லை.
வரதட்சணை தர தாமதமானதால் தனது மனைவியை ராகுல் கபூரும், அவரது குடும்பத்தினரும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் சில மாதங்களுக்கு முன்பு அப்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த வாரம் அங்கு சென்ற ராகுல் கபூர், இனி வரதட்சணை கேட்டு துன்புறுத்த மாட்டேன் எனக் கூறி தனது மனைவியை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து, தனது உறவினர்கள் இரண்டு பேரை ராகுல் வீட்டுக்கு கூட்டி வந்தார். பிறகு, அவர்கள் இருவரையும் தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யுமாறு அவர் கூறியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார் ராகுல். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்வதை செல்போனில் வீடியோவாக எடுத்து ஒரு ஆபாச வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்.
image
“உனது தந்தையால் தான் வரதட்சணை தர முடியவில்லை. உனது ஆபாச படத்தை விற்றாவது அந்தப் பணத்தை நான் பெற்றுக் கொள்கிறேன்” என ராகுல் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராகுல் கபூர், அவரது உறவினர்கள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.