அரச காணிகளில், பலாக்காய்களை பறிக்க பொதுமக்களுக்கு அனுமதி

வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் பலாக்காய்களை பறிப்பதற்கு அனுமதிப்பத்திரங்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு விவசாய, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் இந்த ஆண்டு பலா மரங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 3,000 ஹெக்டேர் வன நிலங்கள் காணப்படுகின்றன. இந்த நிலங்கள் அனைத்திலும் பலாப்பழங்கள் பயிரிடப்பட்டுள்ளதால், இந்த மரங்களின் விளைச்சல்கள் பயன்பாடின்றி மரத்தடியில் விழுந்து அழுகுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் பலா, ஈரப் பலா போன்ற சத்துள்ள உணவுகள் வீணாவது தடுக்கப்பட வேண்டும். வனப் பாதுகாப்பு நிலங்களில் பலாக்காய்களை அறுவடை செய்ய பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க காணிகளுக்குள் அத்துமீறி நுழைவது சட்டவிரோதமானது என்பதால், பலாக்காய்களை பறிப்பதற்கு (அறுவடை) மாத்திரம் பணம் அறவிடாமல் அரசாங்க நிலங்களுக்குள் நுழைவதற்கு வனத்துறையினர் இலவசமாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இலங்கையில் வருடாந்த பலாப்பழ அறுவடை 280 மில்லியன் பலாப்பழங்கள் எனவும் அதில் சுமார் 80 மில்லியன் பலாப்பழங்கள் நுகரப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.