பீகார்: கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்? – மத்திய, மாநில அரசுகளைச் சாடி தேஜஸ்வி ட்வீட்

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டம் மவு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் ஜா (35). இவர் தன் தாய் சீதா தேவி (65), மனைவி சுந்தர் மணி (25), மகன்கள் சிவம் (6), சத்யம் (5) ஆகியோருடன் வசித்துவந்தார். இந்த நிலையில், நேற்று 5 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த அனைவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, இது தற்கொலையா… கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தற்கொலை

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்தப் பகுதியின் காவல்துறை அதிகாரிகள், “பல கிராமவாசிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வந்த பிறகே இறப்புக்கான காரணத்தை அறிய முடியும். மேலும் விசாரணையில், மனோஜ் குமார் ஜா ஏறத்தாழ 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றிருப்பதும், அதை முறையாகச் செலுத்தாமல் இருந்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. முறையாகச் செலுத்தாமல் இருந்து வந்ததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர். எனவே கடன் சுமை காரணமாக மனோஜ் குமார் குடும்பம் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றனர்.

தேஜஸ்வி யாதவ்

இந்த நிலையில், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்.ஜே.டி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “வறுமை, பசி, நிதி நெருக்கடி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் துயரத்தால் பாதிக்கப்பட்ட சமஸ்திபூரில் உள்ள ஒரு ஏழைக் குடும்பம் செய்வதறியாது தற்கொலை செய்துகொண்டிருக்கிறது. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் மிகவும் வேதனையானது மட்டுமல்ல… இதயத்தை சுக்குநூறாக உடைக்கிறது. இது பீகார் மாநிலத்துக்கு ஒரு கரும்புள்ளி. மேலும் இந்தச் சம்பவம் மத்திய, மாநில அரசுகளின் முகத்தில் விழுந்த அறை” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.