லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இளம் புயல் மயங்க் யாதவ் மீண்டும் விளையாடுவாரா?

லக்னோ – ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதில் நாளை நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல்

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. நாளைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எனும் பெருமையைப் பெறும். அதேசமயம் லக்னோ அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

மயங்க் யாதவ் விளையாடுவாரா?

லக்னோ அணியைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள கையோடு, இப்போட்டியில் சொந்த மண்ணில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதேபோல் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்துவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிவேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பிடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக பங்கேற்காமல் இருந்துவரும் மயங்க் யாதவ், இன்றைய போட்டியில் விளையாடும் பட்சத்தில் அது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிகப்பெரும் உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லக்னோ பயிற்சியாளர் சொல்வது என்ன?

மயங்க் யாதவ் குறித்து பேசிய லக்னோ அணி பயிற்சியாளர்களில் ஒருவரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறுகையில், “மயங்க் யாதவ் இன்று வலைபயிற்சியில் பந்துவீசினார். மேலும் அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். இதன் காரணமாக நாளைய போட்டிக்கு முன்னதாக அவருக்கு இறுதி சோதனையை நடத்துவோம், அதன் பிறகு மட்டுமே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அவர் பங்கேற்பது குறித்து நாங்கள் அறிவிப்போம். அவர் ஒரு அற்புதமான திறமையானவர். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் மற்ற பந்துவீச்சாளர்களை விட தரத்திலும் வேகத்திலும் குறைவானர் இல்லை. அதிலும் குறிப்பாக அவரது வேகத்தில் நீங்கள் உங்களுடைய ஷாட்டுகளை விளையாடுவது மிகவும் கடினம். அதுவே அவரது சிறப்பும் கூட” என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.