கர்நாடகாவில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தார் மஜத எம்எல்ஏ ஸ்ரீநிவாச கவுடா..!!

பெங்களூரு: கர்நாடகாவில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் மஜத எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச கவுடா கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தார். 16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 4 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. உத்திரப்பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 6 உறுப்பினர்கள் உள்ளிட்ட 41 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். கர்நாடகாவில் உள்ள 4 இடங்களுக்கு பாரதிய ஜனதா சார்பில் 3 பேர், காங்கிரஸ் சார்பில் 2, மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஒருவர் என 6 வேட்பாளர்கள் கலத்தில் உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2, காங்கிரசுக்கு 1 இடம் உறுதியாகிவிட்ட நிலையில் 4வது இடத்துக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மத சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஸ்ரீநிவாச கவுடா கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சியை பிடிக்கும் என்பதால் அந்த கட்சிக்கு வாக்களித்ததாக தெரிவித்தார். தனது கட்சி எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக மத சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் குதிரை பேரத்தை தடுக்க தனது கட்சி எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.