இந்த இடங்களில் ஒருவருக்கு கொரோனா வந்தால், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்தும், எடுக்கப்படவேண்டிய தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு,

> தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும்.

> கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும்.

> கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

> பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒரு சிலர் தொற்றால் பாதிக்கப்படும்போது, அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

> முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

> போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

> தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

இதுவரை 93.82 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 43 லட்சம் நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது.

எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும். மேல்குறிப்பிட்ட இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.