சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? – அமைச்சர் அமித் ஷா கேள்வி

புதுடெல்லி: சோழர், பாண்டியர், பல்லவர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

இந்தியாவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்து உள்ளனர். ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் குறித்து மட்டுமே அதிக புத்தகங்களை எழுதியுள்ளனர். பாண்டிய மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளனர். அசாமை சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டு, பல்லவர்கள் 600 ஆண்டு, சோழர்கள் 600 ஆண்டுகள் நாட்டை ஆண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை மவுரிய பேரரசு 550 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. சாதவாகனர்களின் ஆட்சி 500 ஆண்டு, குப்தர்கள் ஆட்சி 400 ஆண்டுகளும் நீடித்திருக்கிறது.

குப்த வம்சத்தை சேர்ந்த சமுத்திர குப்தர் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க கனவு கண்டார். ஆனால் அவரை குறித்து எந்த புத்தகமும் எழுதப்படவில்லை.

மராட்டிய மன்னர் சிவாஜி, முகலாயர்களுக்கு எதிராக தீரத்துடன் போராடினார். ராஜஸ்தானின் மேவார் பகுதி மன்னர் பப்பா ராவல், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற முகலாயர்களை தோற்கடித்து விரட்டினார். அவர் குறித்தும் எந்த புத்தகமும் இல்லை.

சீக்கிய குருக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் குறித்து ஆய்வு செய்து உண்மையான வரலாற்றை எழுத வேண்டும்.

கடந்த 1857-ம் ஆண்டு முதலாம் சுதந்திர போராட்டம் குறித்து வீர சாவர்க்கர் புத்தகம் எழுதினார். அவர் புத்தகத்தை எழுதாமல் இருந்திருந்தால் அந்த கால வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவை ஆட்சி செய்த பழங்கால மன்னர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? இனிமேலாவது அவர்கள் குறித்து அதிக புத்தகங்களை எழுத வேண்டும். அவ்வாறு புத்தகங்கள் எழுதப்பட்டால், நாம் நம்பி கொண்டிருக்கும் பல வரலாறுகள் தவறு என்பது புரியும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இதற்கான பணிகளை வரலாற்று ஆசிரியர்கள் இப்போதே தொடங்க வேண்டும்.

அந்நியர்களுக்கு எதிரான ராஜஸ்தான் மன்னர்கள் குறித்த புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளோம். இதனை எழுதிய மருத்துவர் ஒமேந்திர ரத்னுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் மூலம் ராஜஸ்தானின் உண்மையான வரலாறு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அரசு தரப்பில் வரலாறு எழுதப்பட்டால் பல்வேறு சர்ச்சைகள் எழும். எனவே வரலாற்று அறிஞர்கள் இந்திய மன்னர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புத்தகங்களை எழுத முன்வர வேண்டும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.