கூட்டுக் குடும்பத்தின் மிகப்பெரிய பலம் : சிரிப்பால் அதிர்ந்த அரங்கை சிந்திக்க வைத்த 'மாது' பாலாஜி

மறைந்த 'கிரேஸி' மோகனின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் அவரது சகோதரரும், நடிகருமான, 'மாது' பாலாஜி பங்கேற்று பேசினார். சுமார் அரை மணி நேர பேச்சில், அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்து அதிர்ந்து அடங்கியது.

''எங்கள் பூர்வீகம் கும்பகோணம். ஆனால், 60 ஆண்டுகளாக எங்களது சொந்த ஊர் சென்னை, மந்தைவெளி. ''எங்கள் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, அவர்களின் குழந்தைகள் என 16 பேர் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ''இப்போதெல்லாம், கணவர் – மனைவி சேர்ந்து வாழ்றதே கூட்டுக் குடும்பம் என்றாகி விட்டது'' என, சிரிக்க சிரிக்க பேசினார் பாலாஜி.

'கிரேஸி' மோகன் தொடர்பான பல்வேறு சம்பவங்களை சுவாரசியமாக சொல்லிக் கொண்டே போனார். மோகனின் மனைவி நளினி உடல்நிலை சரியில்லாத போது, நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து நலம் விசாரித்தது, தங்களின் குடும்ப அங்கத்தினர் போல இருந்தது குறித்தும் ஓரிடத்தில் குறிப்பிட்டார். இதைச் சுட்டிக்காட்டிய பார்வையாளர் ஒருவர், 'மோகன் மனைவிக்கு சிறுநீரக தானம் கொடுத்தது யார்?' என கேள்வி எழுப்பினார். 'நான் தான்' என்றார் பாலாஜி, தயக்கமே இல்லாமல். அரங்கம் அமைதியாக உற்று நோக்கியது. அதைத் தொடர்ந்து பாலாஜி கூறியது, கூட்டுக் குடும்பத்தின் நிஜமான பலம் என்ன என்பதை உணர்த்தியது.

பாலாஜி கூறியதாவது: நாங்கள் கூட்டுக் குடும்பம் என்பதால், யார் என்ன செய்கின்றனர் என்பது கூட தெரியாது. ஆனால், கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். மலை போல் வரும் கஷ்டம் கூட, கடலில் கரைத்த பெருங்காயம் போல் போய்விடும். அமெரிக்காவுக்கு நாடகம் போடச் சென்றிருந்தோம். இரண்டு மாதம் அங்கேயே தங்கியிருந்து, தொடர்ந்து நாடகங்கள் நடத்த வேண்டி இருந்தது. திடீரென சென்னையில் மோகனின் மனைவி, என் அண்ணி நளினிக்கு, உடல்நிலை மோசமாகிவிட்டது. அமெரிக்காவில் இருந்த எங்களுக்கு தகவல் வந்தது. மருத்துவரை ஆலோசித்த போது, 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என்றார்.

சென்னை திரும்பிய போது, அண்ணிக்கு எங்கள் கூட்டுக்குடும்பத்தில் நான், என் மனைவி, மற்றொரு சகோதரர் என மூவர் கிட்னி தானம் தர தயாராக இருந்தோம். இது தான் கூட்டுக் குடும்பத்தின் மிகப்பெரிய பலம். என் மனைவிக்கு ஏற்கனவே 'சிசேரியன்' செய்திருந்ததாலும், சகோதரருக்கு நீரிழிவு நோய் இருந்ததாலும், நான் சிறுநீரக தானம் அளித்தேன். இதை நான் வெளியிடங்களில் பெரிதாக சொன்னது இல்லை. ஆனால் என் மருத்துவர், 'விழிப்புணர்வுக்காகவாவது, நீ செய்த சிறுநீரக தானம் கண்டிப்பாக வெளியே தெரிய வேண்டும். அது, சிறுநீரகம் தேவைப்படுவோருக்கு உதவும்' என்றார்.

அதன் பிறகு தான், இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, மருத்துவம் சார்ந்த ஒரு கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்தேன். உறவினர்கள், நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் சிறுநீரக தானம் செய்யலாம். சென்னை நகரத்தில் மட்டும் 6,000க்கும் மேற்பட்டோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கின்றனர். சின்ன குழந்தைகள் கூட சிறுநீரக தானத்திற்காக காத்திருக்கும் போது, குடும்பத்தில் உள்ளவர்கள் தாராளமாக உறுப்பு தானம் தர முன் வர வேண்டும்.

என் சகோதரர் சொன்னார், 'நம்ம குடும்பத்திலே இருக்கும் பலம், அண்ணிக்கு சிறுநீரகம் தேவைப்பட்ட போது, மூன்று செட் தயாரா பிரிஜ்ல வெச்சிருக்க மாதிரி இருந்தது' என்று. இவ்வாறு சிறுநீரக தானம் குறித்த விழிப்புணர்வையும், நகைச்சுவையுடன் கூறி முடித்தார் பாலாஜி. வழக்கமாக, பாலாஜி நகைச்சுவையுடன் பேச்சை முடிக்கும் போது, அரங்கில் சிரிப்பொலி அதிரும். ஆனால் இம்முறை, அரங்கத்தில் உறுப்பு தானம் பற்றிய பார்வையாளர்களின் சிந்தனையால் அமைதியே நிலவியது.

வெற்றியின் ரகசியம்
தங்கள் குழுவின் நாடகம் இப்போதும் வெற்றி பெறும் ரகசியம் குறித்தும் பாலாஜி கூறினார். அவர் கூறியதாவது: யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், ஒரு நாடகத்துக்கான கதை, வசனத்தை எழுதுவது ஆண்டவனின் கருணை. அந்த கருணை மோகனுக்கு கிடைத்தது. அவர் எழுதிய நாடகங்கள் காலம் கடந்தும் வெற்றி பெறக்கூடியவை. அவர் இருக்கும் போதே, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடகத்தின் வசனத்தை, காலத்துக்கு ஏற்ப மாற்றுவோம். அன்று என் மகன் ரசித்ததை, இப்போது அடுத்த தலைமுறையில் என் பேத்தியும் ரசிப்பது அப்படி தான்.

கமலுக்கும், மோகனுக்கும் இருந்த தொடர்பு சாதாரணமானதல்ல. மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., என, பல படங்கள் வெற்றி பெற்றன. இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் எல்லாம், எங்கள் நாடகக்குழு பிரபலமாகி விட்டது. மோகன் இறந்த பின், 'இனி நாடகமே வேண்டாம்' என்று தான் இருந்தோம். ஆறு நாள் கடந்தது. கமல் போனில் அழைத்தார். 'என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றார் கமல். 'தெரியவில்லை… நாடகமே வேண்டாம் என இருக்கிறோம்' என்றேன். 'இந்த மாதக் கடைசியிலேயே மோகனின் நாடகத்தை மீண்டும் நடத்த வேண்டும். உங்கள் குழுவுக்கு இனி நான் தான் வழிகாட்டி' என்றார் கமல். ஜூன் 10ல் மோகன் இறந்த நிலையில், 30ம் தேதி நாரதகான சபாவில் நாடகத்தை நடத்தினோம். முதல் வரிசையில் கமல் அமர்ந்திருந்தார்.

இவ்வாறு பாலாஜி கூறினார்.

– நமது நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.