பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 அம்ச கோரிக்கைகள்: ஜூன் 27ந்தேதி வங்கி ஊழியர்கள்வேலைநிறுத்தம்

டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டம், வாரத்தில் 5நாட்கள் வேலை உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜூன் 27ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், மாத இறுதியில் 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வங்கிகளுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கை தொடர்பாக, கடந்த 2015-ம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. எனவே, வங்கிகளுக்கு வாரத்துக்கு 2 நாள் விடுமுறை விடவேண்டும்.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பங்களிப்பு தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கத்தோலிக் சிரியன் வங்கி மற்றும் டிபிஎஸ் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 10லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ந்தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 25, 26ந்தேதி சனி, ஞாயுறு விடுமுறை தினம் என்பதால், தொடர்ந்து 3 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை உருவாகி உள்ளது.  3 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.