பனிலிங்க தரிசனத்துக்கு 3 லட்சம் பேர் முன்பதிவு: அமர்நாத் யாத்திரை தொடங்கியது; முதல் நாளில் 10,000 பேர் பயணம்.!

ஜம்மு: இமயமலையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க, அமர்நாத் பனிக்குகையை நோக்கி பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் கிளம்பினர்.  நேற்று  10 ஆயிரம் பேர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, அமர்நாத் கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இந்த யாத்திரை நடத்தப்படவில்லை. தற்போது தொற்று பீதி குறைந்துள்ளதால், நேற்று முதல் இந்த யாத்திரை தொடங்கியது. அனந்தநாக் மாவட்டத்தில் பகல்காம் பகுதியில் உள்ள நன்வான் முகாமில் இருந்து நேற்று காலை முதல் பிரிவாக 2,750 பேர் கிளம்பினர். முன்னதாக, ஜம்முவில் இருந்து 4,890 பேரை ஜம்மு- காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்கா கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு சிறு குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக 5,700 பக்தர்கள் பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் இருந்து புறப்பட்டனர். அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 10,700 பேர் முதல் கட்டமாக கிளம்பி உள்ளனர். மற்றவர்கள் முகாமில் தங்கியுள்ளனர். இந்த யாத்திரையில் பங்கேற்க 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று தொடங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் 11ம் தேதி முடிகிறது. இந்த யாத்திரையை சீர்குலைக்கவும், பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதை முறியடிப்பதற்காக யாத்திரை செல்லும் பாதைகளில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.