மட்டு மாவட்டத்தில் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் அரச அதிபரால் ஆரம்பம்

சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரனின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கியினால் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போதைய இக்கட்டான கால கட்டத்தில் பயிர் செய்கையை மேற்கொண்டு ,உணவு பற்றாக்குறையை ஓரளவுக்கு தீர்த்துக் கொள்வதற்கான செயற்திட்டமாகவே இது கருதப்படுகின்றது. மிக முக்கியமாக மரவள்ளி, வற்றாளை, கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களை நடுவதன் மூலம் நம் அன்றாட தேவையினை ஓரளவேனும் தீர்ப்பதற்கு இது வழி சமைக்கும். இவ்வேலைத்திட்டம் 05 திகதி ஆரம்பிக்கப்பட்டு 08 திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாவட்ட , பிரதேச, கிராம மட்டம் என பல்வேறு மட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ளன.

இதுதொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்  கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன் கலந்து கொண்டார். இதன் போது உரையாற்றிய அரச அதிபர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் 31 சமுர்த்தி வங்கிகள் இயங்குவதாகவும் அவை அனைத்தும் தற்போது கணணி மயமாக்கப்பட்டு செயற்படுவதாகவும் அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், அதே போன்று நாம் பசுமையான தேசம் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றது போல சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் திரு.பஸீர் , மாவட்ட சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர் J.F..மனோகிதராஜ் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவு முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் , மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பரமலிங்கம் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.