வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடு, கடைகள் சூறையாடல்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்

டாக்கா,

வங்காள தேசத்தில் இந்து மக்கள் வசிக்கும் பகுதியில் புகுந்து, அவர்களது வீடுகள், கடைகளை, கொள்ளையடித்தும் மற்றும் சூறையாடியும் சென்ற சம்பவத்திற்கு அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மதசார்பற்ற ஒரு நாட்டில் சமூக கலவரங்களை எந்த சூழ்நிலையிலும் ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள உத்தரவில், விரும்பத்தகாத தாக்குதலை தடுக்கும் சூழலை ஏற்படுத்த தவற விடப்பட்டதா? மற்றும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் போலீசார் முறையாக செயல்பட்டார்களா? உள்ளிட்டவை பற்றி விசாரணை நடத்தும்படி உள்துறை அமைச்சகத்திடம், இந்த ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த வெள்ளி கிழமை லோஹகரா நகரில் சஹாபரா பகுதியில் இந்து சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் வீடுகளின் மீது தீ வைக்கப்பட்டு உள்ளது.

பேஸ்புக்கில் 18 வயது நபர் ஒருவர் தங்களது மத உணர்வுகளை புண்படுத்தி விட்டனர் என கூறி கும்பல் ஒன்று வெள்ளி கிழமை இறை வணக்கத்திற்கு பின்னர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

அந்த கிராமத்தில் வசித்த ஆகாஷ் ஷா என்ற வாலிபர் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டு உள்ளார் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கல்லூரி மாணவரான அவரை கைது செய்யும்படி கூறி, அவரது வீட்டின் முன் போராட்டம் நடந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் வந்தபோது, ஆகாஷ் அந்த பகுதியில் இல்லை. இதனால், அந்த கும்பல் அருகில் உள்ள இந்து சிறுபான்மை சமூகத்தினர் வசிக்க கூடிய பகுதிகளுக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள், பேஸ்புக் பதிவுக்கு தொடர்பில்லாதவர்களின் வீடுகளின் மீது தீ வைத்து உள்ளனர்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட தீபாலி ராணி சஹா என்ற பெண் வேதனையுடன் சம்பவம் பற்றி கூறும்போது, கும்பல் ஒன்று வீட்டுக்கு வந்து, வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளி சென்றது. இதன்பின்னர் மற்றொரு கும்பல் வந்தது.

கதவு திறந்தே கிடந்தது. வீட்டில் எதுவும் இல்லை என தெரிந்து கொண்டதும், வீட்டை அவர்கள் தீ வைத்து எரித்தனர். எவ்வளவு காலத்திற்கு இந்த வன்முறை அச்சுறுத்தல் நீடிக்கும் என தெரியவில்லை. யார் எங்களுக்கு நீதி வழங்குவார்கள்? யார் பாதுகாப்பு தருவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர், கட்டியிருக்கும் சேலை மட்டுமே மீதமுள்ளது. நல்ல வேளை நான் வீட்டில் இல்லை. கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். வீட்டில் இருக்கும்போது தீ வைத்து இருந்தால், உயிரிழந்து இருப்பேன். ஆனால், இது தப்பிப்பதற்கான ஒரு வழியா? என கேட்டுள்ளார். சஹாபரா கிராமத்தில் தீபாலியின் வீடு உள்பட 3 வீடுகளும், 20க்கும் மேற்பட்ட கடைகளும் சூறையாடப்பட்டும், எரிக்கப்பட்டும் உள்ளன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆகாஷின் தந்தை அஷோக் சஹாவை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் யாரும் கைது செய்யப்பட்வில்லை என டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.