அமலாக்கத் துறைக்கான அதிகாரம்: உறுதி செய்தது கோர்ட்| Dinamalar

புதுடில்லி:’பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் கைது செய்வது உள்ளிட்ட அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானது; அது தன்னிச்சையானது அல்ல’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பல்வேறு பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில், அரசியல் தலைவர்கள், பல மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தன் அதிகாரத்தை அமலாக்கத் துறை தவறாகப் பயன்படுத்துவதாக, பல எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சட்டவிரோதம்

இவற்றை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவிட்டதாவது:
பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின், 19ம் பிரிவின்படி, கைது செய்வதற்கான அதிகாரம் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சற்று கடுமையான சட்டமாக இருந்தாலும், தன்னிச்சையானது என்று கூற முடியாது. கைது செய்வதற்கு முழு அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது.குற்றஞ்சாட்டப்பட்டோருக்கும் சாதகமான பிரிவுகள் உள்ளதால், இந்தச் சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என்று கூற முடியாது.

அதுபோல பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் 5ம் பிரிவும், அரசியல் சாசன சட்டத்தின்படி செல்லும்.அமலாக்கத் துறை வழங்கும் இ.சி.ஐ.ஆர்., எனப்படும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது இல்லாமலேயே அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கலாம்.
கைது செய்யும்போது, எந்த அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் என்பதை மட்டும் அமலாக்கத் துறை தெரிவித்தால் போதும். இந்தச் சட்டத்தின் பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதாக உள்ளன. அதனால், அவற்றை எதிர்க்கும் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்
படுகின்றன.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்கள் முடக்கம்

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:இந்த சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆண்டுகளில் 4,850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 93 ஆயிரத்து 368 கோடி ரூபாய்க்கான மோசடிகள் அடையாளம் காணப்பட்டு, சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில், 2,883 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை நடந்துள்ள வழக்குகளில், 55 ஆயிரத்து 899 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடிகள், நீதிமன்றங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.