அடுத்து துணை ஜனாதிபதி யார்? – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்

நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதை அடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர் மற்றும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்கு அளித்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

மக்களவையில் 543, மாநிலங்களவையில் 245 என மொத்தம் 788 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இதில், 8 உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ள நிலையில், 780 உறுப்பினர்கள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்கு அளிக்க முடியும்.

இதில் வாக்குப்பதிவை புறக்கணிக்க மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 36 எம்பிக்கள் முடிவு செய்துள்ளதால், 744 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜக்தீப் தன்கருக்கு, பெரும்பான்மையைத் தாண்டி, 527 உறுப்பினர்களின் வாக்குகள் கிடைக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்கான முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.