‘கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர்’ கஸ்டாவோ பெட்ரோ பதவியேற்பு; மாற்றம் சாத்தியமா?

பொகடா: பலத்த வரவேற்புக்கு இடையில் கொலம்பியாவின் அதிபராக கஸ்டாவோ பெட்ரோ பதவி ஏற்றுக் கொண்டார்.

ஜூனில் நடந்த கொலம்பிய அதிபர் தேர்தலில் கஸ்டாவோ பெட்ரோ 50%-க்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இந்த நிலையில், கொலம்பிய அதிபராக கஸ்டாவோ ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். அவரது பதவியேற்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள். கொம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர் கஸ்டாவோ பெட்ரோ ஆவார்.

பதவியேற்பு நிகழ்வில் கஸ்டாவோ பெட்ரோ பேசியது: “எனக்கு இரண்டு நாடுகளும் வேண்டாம், அதேபோல் எனக்கு இரண்டு சமூகங்களும் வேண்டாம். எனக்கு வலிமையான ஒன்றுபட்ட கொலம்பியா வேண்டும். நாட்டில் நிலவும் சமத்துவமின்னைக்கு எதிராக போராடுவேன். காலநிலை மாற்றத்திற்கு எதிராக துரித நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்.

புரட்சிக் குழுகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வேன். ஆயுதம் ஏந்திய அனைவரையும் அதிலிருந்து விடுபடுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

போதைப்பொருளுக்கு எதிரான புதிய சர்வதேச மாநாட்டுக்கான நேரம் இது. ஏனெனில் போதைப்பொருளுக்கு எதிரான போர் தோல்வியடைந்தது. 40 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கு அதிகமான லத்தீன் அமெரிக்கர்களை அது கொன்றது. மேலும், 70,000 வட அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதீத போதை காரணமாக கொல்லப்படுகின்றனர். போதைப்பொருட்களுக்கு எதிரான போர் மாஃபியா கும்பலை வலுப்படுத்தியது. நாட்டின் மாகாணங்களை வலுவிலக்கச் செய்துள்ளது.

காலநிலை மாற்றத்தை சர்வதேச அளவில் எதிர்த்துப் போராட வேண்டும். குறிப்பாக, அதிகளவில் கார்பன் வெளியிடும் நாடுகள் காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

கொலம்பியாவின் தீரா பிரச்சினை: கொலம்பியாவை பொறுத்தவரை அந்த நாட்டின் தீரா பிரச்சனையாக போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளது. உலக அளவில் போதைப்பொருட்கள் உற்பத்தில் கொலம்பியா முதல் இடத்தில் உள்ளது.

முழுமையாக போதைப்பொருள் விளைச்சலையும் கடத்தலையும் ஒழிக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் நினைத்தாலும் அவர்களுக்கு நிறைய நடைமுறைப் பிரச்னைகள் அங்கு உள்ளன. சிறு அளவில் கோகெய்ன் மற்றும் கஞ்சாவை வைத்திருப்பது குற்றமல்ல என்று கூறுகிறது கொலம்பியா சட்டம்.

இந்த நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள கஸ்டாவோ பெட்ரோ போதைப்பொருட்கள் கடத்தலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.