“நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை… என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா" – மணிகண்ட பூபதி பேட்டி

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு சமீபத்தில் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி, ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் என்றும் வலதுசாரி நிறுவனத்தில் இணை நிறுவனராக பணிபுரிந்தவர் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவி எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவரது நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து பின்புலத்தை ஆராய ஆரம்பித்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை. இந்த விமர்சனங்கள் குறித்து மணிகண்ட பூபதியை தொடர்புகொண்டு பேசினோம். விகடனுக்காக முதன்முறையாக மனம் திறந்தார்.

மணிகண்ட பூபதி

“முதலில் என்மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் அனைத்தும் பொய்யானவை. முழுமையாக மறுக்கிறேன். நான் ஆர்.எஸ்.எஸ்ஸும் கிடையாது. பாஜகவிலும் இல்லை. என்னுடைய சமூக வலைதளங்களில் எப்போதாவது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தால், ஆதாரத்துடன் நிரூபிக்கலாம். ஆதாரம் இல்லாமல் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரங்கராஜ் பாண்டே எனக்கு நண்பர்தான். கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் சாணக்யாவைத் தொடங்கினார். அவர் செல்போனிலேயே பேசிப் போட்ட வீடியோக்களைப் பார்த்துவிட்டு, “ஏன் இவ்ளோ தரமில்லாம இருக்கு”ன்னு கேட்டேன். ‘எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க ஏதாவது டெக்னிக்கலா ஹெல்ப் பண்ணுங்க’ன்னு கேட்டுக்கிட்டார். அதனாலதான், சம்பளமே வாங்காம சாணக்யாவுக்கு டெக்னிக்கலாக உதவி செய்தேன். சம்பளம் வாங்காதத்துக்குத்தான் பாண்டே இணை நிறுவனர் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அதுவும், வெறும் ஒன்பது மாதங்கள்தான் அங்கு இருந்தேன். கொரோனாவின்போது சாணக்யாவிலிருந்து விலகிவிட்டேன். அந்த நிறுவனத்தின் டாக்குமென்டைப் பார்த்தால்கூட, எனது பெயர் இருக்காது. தமிழக அரசின் கல்வி டிவிக்கு அப்ளை செய்யும்போது, நான் சாணக்யாவிலும் இல்லை. டெக்னாலஜி அட்வைஸராக பல்வேறு நிறுவனங்களுக்கு பணிபுரிந்து வருவதுபோல்தான் சாணக்யாவுக்கும் பணிபுரிந்தேன்.

இதற்குப்போய், ஆர்.எஸ்.எஸ், பாஜக பின்னணி என்றெல்லாம் தொடர்புபடுத்துகிறார்கள் . நானாக இருந்தால் தொழில்முறையை மட்டும்தான் பார்ப்பேன். பால் தினகரனின் வெப்சைட்டை மேம்படுத்தக்கூடதான் என்னுடைய ஆலோசனையைக் கேட்டுள்ளார்கள். அதற்கான, பேச்சுவார்த்தையும் போய்க்கொண்டிருக்கிறது. இப்படி, டெக்னாலஜி அட்வைஸராக பல்வேறு நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் பணிபுரிந்து வருகிறேன். ஜெயலலிதா மேடத்தின் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளேன். நிறைய வேலைகள் செய்துகொடுத்துள்ளேன். என்னுடைய பணி பிடித்துப்போய் பாராட்டியதோடு, `எங்கக் கம்பெனியில் சீஃப் கேமராமேனாக இருக்கவேண்டும்’ என்றார் ஜெயலலிதா மேடம். அங்கு ஒருவருடம் பணியாற்றினேன். அதற்காக, நான் அதிமுக ஆகிவிடுவேனா? கல்வி டிவியில் சேர்ந்தால் அதிமுக கொள்கைகளைப் புகுத்திவிடுவேனா? கலைஞர் அய்யாவும் என்னை பாராட்டிய தருணங்கள் உண்டு. ஜீசஸ் கால்ஸ் வெப்சைட்டிற்கு பணியாற்றிக் கொடுத்தால், அவர்களின் கொள்கைகளைப் புகுத்திவிடுவேனா? வெறும் தொழில் முறையில்தான் அனைவருக்கும் பணியாற்றிக்கொடுக்கிறேன். விமர்சிப்பவர்கள் இதனையெல்லாம் பேசவேண்டியதுதானே?. எனக்கு எந்த அடையாளத்தையும் எந்த சித்தாந்தத்தையும் திணிக்கவேண்டாம்.

ஜெயலலிதாவுடன் மணிகண்ட பூபதி

உண்மையில் எனக்கு எந்தப் பின்னணியும் கிடையாது. ஜல்லிக்கட்டு எங்கள் ரத்தத்தில் ஊறியது. ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டுக்குச் செல்வோம். இதுவரைக்கும் என்னுடைய சித்தாந்தம் என்று எதையும் வெளிக்காட்டியதில்லை. கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கேயாவது செல்லும்படி இருந்தால், நெற்றியில் இருக்கும் எனது பொட்டை அழித்துவிட்டுத்தான் செல்வேன். எந்தவித மத அடையாளங்களும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன் நான். அப்படிப்பட்ட இப்படி தொடர்புபடுத்தி விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. பொய்யைப் பரப்புவதால் என்னுடைய கேரியரும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”

இப்படி விமர்சிக்க என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

“தமிழக அரசு ஆளுமையானவர்களையும் திறமையானவர்களையும்தான் நியமிக்கும் என்ற நம்பிக்கையை முதலில் வைக்கவேண்டும். எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. இந்த சர்ச்சைக்கு, எனது நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பது சரியாக வராத பட்சத்தில் தன்னிலை விளக்கம் கொடுப்பேன். உத்தமபாளையத்திலுள்ள ராமசாமி நாயக்கன்பட்டிதான் எனது ஊர். அங்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் மதம் பார்ப்பவன் கிடையாது. ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றும்போது நிதி மோசடி செய்ததாகவெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார்கள். உண்மையில், அப்படி செய்திருந்தால் ஆதாரத்துடன் விமர்சிக்கட்டும். அவர்கள், குறிப்பிடும் தொலைக்காட்சியில் 5 வருடங்கள் பணிபுரிந்துவிட்டு நல்ல முறையில்தான் சி.இ.ஓவிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். அதற்கான, சான்றிதழ்களும் உள்ளன. ஆனால், பொய்யானவற்றை வேண்டுமென்றே பரப்புவதால், எவ்வளவு பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை யோசிப்பதில்லை. கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ பதவி கிடைக்காத யாரோ ஒருவர் ஒரு அறிக்கை விடுகிறார். அதன் அடிப்படையில் தூண்டிவிட்டு விமர்சிக்கிறார்கள். குறிப்பாக, யூடியூபினர்தான் என்னை விமர்சிக்கிறார்கள். காட்சி ஊடகங்கள் ஏன் இதுபற்றி பேசவில்லை? உண்மை என்னவென்றும் என்னைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியும்.

மணிகண்ட பூபதி

இந்தந்த நிறுவனத்தில் பணிபுரிந்தேன் என்று LinkedIn தளத்தில் எல்லோரும் குறிப்பிடுவார்கள். அப்படித்தான், நானும் சாணக்யாவில் இருந்ததை குறிப்பிட்டிருந்தேன். நானாகவே, நேர்மையாகத்தானே பதிவு செய்துள்ளேன். எதையும் மறைக்கவில்லையே? சாணக்யாவில் இருந்தேன் என்பவர்கள் விலகியது குறித்து ஏன் பேசவில்லை? சாணக்யாவில் பேசி இதுவரை ஒரு வீடியோவாவது வெளியாகி இருக்கிறதா?. அப்படி இருந்தால், ஆதாரத்துடன் காட்டிவிட்டு விமர்சியுங்கள். சாணக்யாவின் சோசியல் மீடியாவை கட்டமைக்கும் பணியைச் செய்தேன். இன்னும் வேறு கட்சிகள் என்னை அணுகினால் அவர்களுக்கான கட்டமைப்பையும் நிச்சயம் செய்வேன். ஐபேக் நிறுவனம் பாஜகவுக்கும் பணிபுரிந்தது. திமுகவுக்கும் பணிபுரிந்தது. அதனால், தொழில்முறையைத்தான் பார்க்கவேண்டும்”.

உங்கள் நியமனத்தை அரசு நிறுத்தி வைத்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

அமைச்சர் அன்பில் மகேஷுடன் மணிகண்ட பூபதி

“அரசின் முடிவை மதிக்கிறேன். இன்டர்வியூ வெளிப்படையாகத்தான் நடந்தது. எந்த விதத்திலும் அரசியல் தலையீடு இல்லாமல் நடத்தப்பட்ட இன்டர்வியூ இது. மதிப்பிற்குரிய அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நன்றி”.

கல்வித்துறையிலும் நிகழ்ச்சிகள் தயாரிப்பிலும் உங்களுக்கு முன் அனுபவம் இல்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே?

“கல்வித்துறையில் நான் என்னவெல்லாம் செய்துள்ளேன் என்பதை ஆதாரங்களாக எங்கு வேண்டுமென்றாலும் கொடுக்கத்தயார். என்மீது அவதூறு பரப்புபவர்கள் தங்களது விமர்சனங்களை திரும்பப்பெற்றுக் கொள்வார்களா?. கல்வித்துறையிலும் நிகழ்ச்சி தயாரிப்பிலும் என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் வெரிஃபிகேஷன் செய்தபிறகே, கல்வி தொலைக்காட்சிக்காக ஐந்து பேர் இன்டர்வியூ செய்தார்கள். சுமார் 40 நிமிடங்கள் நடந்த இன்டர்வியூவில், என்னை டெஸ்ட் செய்ய தலைப்பும் கொடுத்தார்கள். ‘நான் கல்வி டிவியை எப்படி வடிமைப்பேன்? எதிர்காலத்தில் கல்வி எப்படி இருக்கும்?’ என்பதுதான் அந்தத் தலைப்பு.

நான் எங்கு சென்றாலும் ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பேன். கடந்த 2010 ஆம் ஆண்டு மதுரையிலுள்ள ஒரு கல்லூரிக்கு பெரிய பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்த புரொஃபசர்கள் மதுரைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதே, டெக்னாலஜியைப் பயன்படுத்தி மாணவர்களை புரொஃபசர்களுடன் ஒரு ஸ்டூடியோவில் சென்னையிலிருந்தே உரையாட வைத்தோம். இன்று கல்வி தொலைக்காட்சி ஒருவழிக் கல்வி தொலைக்காட்சியாக உள்ளது. பிரைவேட்டில் மட்டும்தான் இருவழித்தொடர்புடன் படிக்க முடியுமா? ஏன் நம் ஏழை மாணவர்கள் படிக்க முடியாதா? அந்தத் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும் என்பதுதான் எனது முயற்சியே. ஏற்கனவே, கல்வித்துறைக்கான நிகழ்ச்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்று நிறைய வீடியோக்கள் செய்துள்ளேன். கடந்த வருடம் தயாரித்த வீடியோவை எடுத்து அனிமேட் செய்து, இது எப்படி இருந்தால் சரியாக இருக்கும் என்று பிரசன்டேஷனே கொடுத்தேன். ஒவ்வொரு வீடியோவையும் ப்ளே செய்து விளக்கமளித்ததைப் பார்த்தப் பின்புதான் தேர்வுக்குழுவினர் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மணிகண்ட பூபதி

இன்று தனியார் தொலைக்காட்சியில் ஹிட் அடித்த ஆயுத எழுத்தும் கேள்விக்கென்ன பதிலும் என்னுடய ஷோக்கள்தான். என்.டி.டிவி, இந்து மெட்ரோவிலும் பணிபுரிந்துள்ளேன். தந்தி டிவியில் பணிபுரியும்போதுதான் பாண்டே வந்தார். நான் அங்கு பத்து மாதங்கள் பணிபுரிந்துவிட்டு வந்துவிட்டேன். கடந்த, 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரை எனக்கும் பாண்டேவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒரு போன் காலும் இல்லை. பத்து வருடங்களுக்கும் மேலாக, இதே நம்பரைத்தான் பயன்படுத்துகிறேன். என் டேட்டாவை பார்த்துக்கூட செக் செய்துகொள்ளலாம். பாண்டேவுக்கு தொழில் முறையாக மட்டுமே பணியாற்றிக் கொடுத்தேன் என்பதை அதனால்தான், உறுதியாகச் சொல்கிறேன். ஆனால், அதுவே சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை”.

நியமனம் நிறுத்தி வைக்கப்படுவதற்கு முன்போ, பின்போ அமைச்சர் அன்பில் மகேஷ் உங்களிடம் பேசினாரா?

“பேசவில்லை. அமைச்சரை சந்திப்பதற்கு முதல்நாள், ‘நாளை அமைச்சர் கையால் உங்களுக்கு அப்பாய்ண்மென்ட் ஆர்டர் கொடுக்கப்படும்’ என்றார்கள். மறுநாள் அமைச்சர் அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டரைக் கொடுத்தார். அவரிடம் இருந்து வாங்கியது மிகவும் பெருமிதமாக இருந்தது. அதன்பிறகு, அவரைப் பார்க்கவுமில்லை. பேசவுமில்லை. கல்வி தொலைக்காட்சிக்கு யாரைத் தேர்வு செய்துள்ளார்கள் என்பதும் அமைச்சருக்கு முன்கூட்டியே தெரியாது.

கல்வி தொலைக்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சொல்லி அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க ஊருக்கு வந்தேன். ஆனால், நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி செய்தி கேட்டு அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. சமூக வலைதளங்களில் வருவது உண்மையா? பொய்யா என்பதை மக்கள் ஆராய வேண்டும். இவருக்கான பின்புலம் இருக்கா என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். ரங்கராஜ் பாண்டே வேறு. நான் வேறு. தொழில் முறையில் இதனை அணுகுகிறேன். அவ்வளவுதான். ஜீசஸ் கால்ஸ் அழைத்தாலும் வேலை செய்வேன். நான் உருவாக்கிய ‘ஆயுத எழுத்து’, ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகள் இன்றும் ஓடிக்கொண்டிருப்பது மிகப்பெரிய சக்சஸ் தானே? அதனால், எனது திறமையைத்தான் பார்க்கவேண்டும்”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.