லஞ்சம் வாங்கினால் காவலர்கள் பணியிடை நீக்கம்; சென்னை காவல்துறை கடும் எச்சரிக்கை

சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் செய்தியாளர்களை சந்தித்தார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பேட்டி கொடுத்த அவர், பதிவு எண் பலகை இல்லாமல் அதிகமாக வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு தணிக்கை சென்னை போக்குவரத்து காவல்துறையால் கடந்த 3-4 நாட்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். சிறப்பு தணிக்கையில் முறையான பதிவு எண் பலகைகள் இல்லாத வாகனங்களை  ஓட்டியது தொடர்பாக 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். பிடிபட்ட வாகனங்களில் பெரும்பாலான இருசக்கர வாகனங்களும், சில நான்கு சக்கர வாகனங்களும் பதிவு எண் பலகை இல்லாமல் இருந்தது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கபில் குமார் சரத்கர், ” பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் ஓட்டிய நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, பதிவு எண் பலகை பொருத்தாமல் வாகனம் செலுத்துவதின் பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பியுள்ளோம். பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் செலுத்தி வந்தவர்கள் மீது குற்றப் பின்னணி உள்ளதா? சம்மந்தப்பட்ட வாகனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையதா? என்பதை விசாரித்துள்ளோம். குற்றப் பின்னணியுடைய நபர்களோ, குற்ற வழக்கு தொடர்புடைய வாகனமோ இந்த சிறப்பு தணிக்கையில் சிக்கவில்லை. பதிவு எண் பலகை தொடர்பான இந்த சிறப்பு தணிக்கை மூலம் அனைத்து வாகனங்களிலும் பதிவு பலகைகள் பொருத்தப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிவதும், விபத்து போன்ற சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களை அடையாளம் காண்பதும் எளிமையாகும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும்போது, சம்மந்தப்பட்ட வாகனத்தின் மதிப்பே 10 ஆயிரம் ரூபாய் வராது என வாகனங்களை விட்டுச் செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மாநகரில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுவது தெரியவந்தால் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளோம். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக தினசரி 100 வழக்குகள் வீதம் ஆண்டுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் வழக்குகள் போடப்படுகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம்  லஞ்சமாக பணமாகவோ பொருளாகவோ வாங்கினால் 6 மாத காலமாக பணியிட நீக்கம் செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.