திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

கிராம ஊராட்சிகளில் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், மா.ஆர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கிராம ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளும் வகையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பொது இடங்கள், பள்ளி, பொது நிறுவனங்கள், பொது கழிவறைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, தன் சுத்தம், குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு மற்றும் கிராம சபை தீர்மானங்கள் நிறைவேற்றுதல் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் வரும் அக்.2-ம் தேதி வரைமேற்கொள்ளுமாறு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இப்பணிகளை கண்காணிக்க பொறுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, உதவி திட்ட அலுவலர்கள், உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி கண்காணிப்பாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், பெரும்புதூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 274 கிராம ஊராட்சிகளில், சிறந்த எழில்மிகு கிராமங்களை உருவாக்குவதற்காக இந்தசிறப்பு முனைப்பு இயக்கம்அக். 2-ம் தேதி வரை நடக்கிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதல் நிகழ்வாக அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, விழிப்புணர்வு பேரணியும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தூய்மை கிராம உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிமாறன், பிடிஓக்கள் சீனிவாசன், வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.