தேஜஸ்-1 வெற்றியை தொடர்ந்து தேஜஸ்- 2 ரக போர் விமானம் தயாரிப்பு: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தேஜஸ் -1 போர் விமானத்தின் செயல்பாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘தேஜஸ் – 2’ ரக போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள், கடந்தாண்டு விமான படையில் இணைக்கப்பட்டது. இவற்றின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மேலும், இவற்றை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த விமான தயாரிப்பு வெற்றி பெற்றதை தொடர்ந்து,  இதற்கு அடுத்த கட்டமாக மேம்படுத்தப்பட்ட‘தேஜாஸ்-2’ ரக போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான ஒன்றிய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.15 ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் இந்த ரக போர் விமானங்கள், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட போர் விமானங்களை விட சக்தி வாய்ந்த இன்ஜின்களை கொண்டிருக்கும்.

இது குறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘தேஜாஸ் மார்க் 2 போர் விமானங்கள் ரூ.15 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்படும்.  இந்த ரக போர் விமானங்களின் சோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்காக ரூ.6 ஆயிரத்து 500 கோடி செலவாகும். இந்த திட்டத்துக்காக ஏற்கனவே ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விமான படையில் உள்ள  மிக் 21 விமானங்களை மாற்றுவதற்காக தேஜாஸ் மார்க் 1 விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிராஜ்-2000, ஜாகுவார், மிக் 29 போன்ற விமானங்களை மாற்றிவிட்டு தேஜாஸ்- 2 விமானங்கள் படையில் சேர்க்கப்படும். தேஜாஸ்- 1 விமானங்கள் வான்வெளி பாதுகாப்புக்காகவும் தேஜாஸ்- 2 விமானங்கள் எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும்,’ என தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.