பேரிடர் கால மீட்பு பணி குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தனியார் கல்வியியல் கல்லூரி கூட்டரங்கில் பேரிடர் காலத்தில் மீட்பு பணி தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில் ஜி.வி.கே 108 ஆம்புலன்ஸ் குழுவின் மாநில தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தீயணைப்பு குழு மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் ஜி.வி.கே 108  ஆம்புலன்ஸ் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் மூலமாக அளிக்கப்படும் இந்த பயிற்சி வகுப்பில் மழைக்காலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் வரும் வரை காத்திருக்காமல் அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்க வேண்டும், அதேபோல் நீர்நிலைகளில் சிக்கியவர்களை பாதுகாப்பது, விபத்தில் அடிபட்டவர்களை எப்படி தூக்கிச் செல்வது என பல்வேறு வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது. 12 நாள் நடக்கும் பயிற்சியானது நேற்று துவங்கியது.  மேலும், ரூ.9 ஆயிரம் மதிப்பிலான பேரிடர் மீட்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் தொலைபேசி எண்களும் பேரிடர் நேரங்களில் தொடர்பு கொள்ள ஏதுவாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் 108 சேவை மைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.