அதிமுக தொண்டர்களுக்கு ஜாக்பாட்: எடப்பாடி எடுத்த முடிவு!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே தன் பக்கம் நிர்வாகிகளை ஈர்க்க பசையாக கவனித்து வருகிறார்

என்கிறார்கள். இதற்கு கொங்கு மண்டலத்தில் உள்ள அவருக்கு நெருக்கமான மாஜி அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது. கடுமையான போராட்டத்துக்கு பின்னர், இடைக்கால பொதுச் செயலாளராக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள அவருக்கு சட்ட ரீதியாக பல்வேறு குடைச்சல்களை ஓபிஎஸ் கொடுத்து வருகிறார்.

பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வந்த தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு சாதகமாக இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் செய்துள்ள மேல்முறையீடு மற்றும் அவருக்கு பாஜக மேலிடம் அளிக்கும் ஆதரவு உள்ளிட்டவைகளால் சற்று கலக்கத்தில் இருப்பதாகவே தெரிகிறது. ஓபிஎஸ் ஒவ்வொரு முறையும் தொண்டர்களின் ஆதரவு தனக்கிருப்பதாகவே கூறி வருகிறார். எனவே, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டுமென்றால், நிர்வாகிகளின் ஆதரவுடன் தொண்டர்களின் ஆதரவையும் பெற வேண்டும் என சுதாரித்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். அதன் ஒருபகுதியாக, நலிவடைந்த கட்சித் தொண்டர்களின் லிஸ்ட்டை எடுக்க சொல்லியுள்ளாராம்.

அதிமுகவை நிறுவிய கால கட்டத்தில் போக்குவரத்து துறை உள்ளிட்ட பல அரசு பணிகளில் இருக்கும் கட்சியினரை ஒன்றிணைக்க அண்ணா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பை அறக்கட்டளையாக ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர். அவரது மறைவுக்கு பின்னர், 2003 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அறக்கட்டளை ஆகிய இரண்டு அறக்கட்டளைகளை ஜெயலலிதா உருவாக்கினார். இந்த மூன்று அறக்கட்டளைகளுக்கும் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், உள்ளிட்ட மூவரும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களுக்கான செலவுகள், கட்சியின் சார்பாக கொடுக்கப்படும் விளம்பரங்கள், அதிமுகவின் தலைமை கழக அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் சம்பளம், அலுவலக பராமரிப்பு செலவுகள். விபத்து மற்றும் இயற்கையான மரணத்தை சந்திக்கும் கட்சி தொண்டர்களுக்கு நிதி உதவி, நலிவடைந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிதி உதவி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஜெயலலிதா, சோ ஆகிய இருவர் மறைவுக்கு பின்னர் 3 அறக்கட்டளைகளுக்கும் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் ஒருவரே பொறுப்பாளராக இருந்து வந்தார். இதனிடையே, சசிகலா தன்னுடைய பெயரையும் தினகரன் பெயரையும் அறக்கட்டளையில் இணைக்க செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது அதிமுகவின் நிதிச்சிக்கலுக்கு காரணமாக அமைந்தது. இதனால், ஜெயலலிதா இருந்தபோது நலிவடைந்த கட்சித் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி எடப்பாடி பழனிசாமி காலத்தில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பான பிரச்சினை எழும்போதெல்லாம், சசிகலாவிடம் கஜானா சிக்கி விட்டதாக கூறி வண்டியை ஓட்டி வந்தார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுகவினர்.

இந்த நிலையில், பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் பெரும்பாலான நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால், சுதாரித்துக் கொண்ட அவர், மீண்டும் ஸ்வீட் பாக்ஸ்களை இறக்க திட்டமிட்டுள்ளதாகவும், நலிவடைந்த தொண்டர்களின் லிஸ்ட்டை எடுக்க சொல்லியுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.