தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட சிறுவர்கள்.. தின்பண்டம் அனுப்பி பாசத்தை பொழிந்த 'மதுரைக்காரர்கள்'

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று தின்பண்டம் வாங்க சென்றுபோது நடந்த சம்பவம், காணொலியாக இணையத்தில் வெளியானது. கடையில் இருந்த நபர் அந்த வீடியோவை எடுத்து பகிர்ந்துள்ளார் என தெரிகிறது. 

சிறுவர்கள் தின்பண்டம் வாங்க சென்றபோது, அந்த கடைகாரர், ‘உங்களுக்கு எல்லாம் தின்பண்டம் கொடுக்க முடியாது. ஊர்க்கூட்டம் போட்டு  முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு கடையில் இருந்து எதுவும் தரக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது’ என கூறுவது வீடியோவில்  பதிவாகியுள்ளது. அதற்கு ஏதும் அறியாத அந்த  சிறுவர்கள் கட்டுப்பாடு என்றால் என்ன என்று கேட்கின்றனர். 

அதற்கு அந்த கடைக்காரர் உங்கள் யாருக்கும் தின்பண்டம் கொடுக்கக்கூடாது என்று எங்கள் ஊர் சார்பில் கூட்டம் போட்டு முடிவு செய்துள்ளார்கள்.அதனால் உங்கள் தெருகாரர்கள் இங்கு வரக்கூடாது. அதனால் நீங்கள் யாரும் இங்கு பொருள் வாங்க முடியாது. இதை உங்கள் பெற்றோர்களிடமும் சொல்லுங்கள் என்றும் மாணவர்களை அனுப்பி வைக்கிறார். இந்த வீடியோ வைரலாகி தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், தீண்டாமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட சிறுவர்களுக்கு, மதுரையில் உள்ள பல்வேறு சமூகத்தினர் வைத்திருக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று தின்பண்டங்களை வாங்கி, சிம்மக்கல் பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தின்பண்டங்களை அனுப்பி வைத்தனர்.

மேலும், தீண்டாமைக்கு எதிராக ஒரு குழு ஒன்றை அமைத்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கூறிய அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, 5 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டு, ஊர் நாட்டமை, கடை உரிமையாளர் என 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.