காமராஜர் பல்கலை. தொலைநிலை கல்வி இயக்ககத்தில் கல்வி கட்டண வசூலில் முறைகேடு: 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கத்தில்  லஞ்சம் பெற்று மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், 3 ஆண்டுகள் படிக்காமல் ஒரு ஆண்டு படித்து விட்டு ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு முன்பு  சேர்ந்தது போல் கணக்கு காட்டி கம்ப்யூட்டரிலும் திருத்தம் செய்து பலருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இத்தகைய முறைகேடுகள் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி  தேர்வுத்துறை அலுவலர்கள், தொலைநிலை கல்வி ஈடிபி அலுவலர்கள் ஆகியோர் உதவியுடன் மாணவர் சேர்க்கை மையத்தினர் மூலம் நடைபெறுவதாக கடந்த 2018ல் குற்றச்சாட்டு எழுந்தது. புகாரில் சிக்கிய அலுவலர்கள் மீது விசாரணை மேற்கொள்ள கடந்த 2019 ஜூலையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு  ஒப்புதல் வழங்கியது.  லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை தொடர்ந்து, அப்போதைய  துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற  ஆட்சிக்குழு கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், ஈடிபி கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்ப்யூட்டர் புரோகிராமர் கார்த்திகை செல்வன் ஆகிய மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்த 2 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு துறையினரின் விசாரணை நடந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் தேர்வு துறை கண்காணிப்பாளர் ராஜபாண்டியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர்கள் சத்தியமூர்த்தி, ராஜபாண்டி, புரோகிராமர் கார்த்திகை செல்வன் ஆகிய 4 பேர் உட்பட கேரளாவில் சேர்க்கை மையம் நடத்தி வந்த ஜிஜி, அப்துல் அஜிஸ், சுரேஷ்,  ஜெயப்பிரகாசம் என மொத்தம் 8 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

போலியான தேதியிட்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை கொடுத்து, முறைகேடாக பதிவேற்றம் செய்தல், போலி டிடி கொடுத்தல், போலி டிடி எண்ணை பதிவேற்றம் செய்தல், கம்ப்யூட்டரில் முறைகேடாக திருத்தம் செய்தல், பல்கலைக்கழக வங்கி கணக்கில்  பணம் செலுத்தாமல் செலுத்தியது போல் ஆவணத்தை மாற்றியது ஆகியவற்றின் மூலம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது; பல்கலைக்கழகத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது என  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 பேரில் ஒருவர் இறப்பு
கடந்த 2017-18 கல்வியாண்டில் 16,580 மாணவர்கள் சேர்க்கை டிடியில் 858 டிடிக்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது. கடந்த 2014  ஜூலை முதல் டிசம்பர் வரை  பெறப்பட்ட 1,918 சேர்க்கை விண்ணப்பங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1,287 விண்ணப்பங்களில் 6 விண்ணப்பங்கள் மட்டுமே முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. தற்போது வழக்கு பதிந்துள்ள 8 பேரில் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் கடந்த ஆண்டு இறுதியில் மரணமடைந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.