பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் அதற்கு எதிராக பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள்

நாட்டில் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடையில்லை.

ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் அதற்கு எதிராக பொலிசார் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26)  நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பொலிசாருக்கு தேவைப்படுமாயின் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு இராணுவம் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியும், கூட்டங்களை நடத்த முடியும். இருப்பினும் சட்ட கட்டமைப்புக்கு அமைவாக அந்த கூட்டத்துக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட வேண்டும்.

கிராமத்திலும் கூட ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.

நாளாந்த மாமூல் வாழ்க்கை தடைப்படும் வகையில் செயற்படுவதை எவரும் விரும்புவதில்லை. இதன் காரணமாக அனைத்தையும் கவனத்தில் கொண்டே பொலிஸ் பிரிவில் அனுமதி வழங்கப்படும்.

இதேபோன்று நினைத்தவுடன் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம், ஊர்வலத்துக்கு சட்டரீதியில் செயற்படுவதற்கான கடமைப்பாடு பொலிசாருக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலையம் என்பது இன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஏற்படும் நிலைமைகளை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தும் முறையாகும்.

சமீபத்தில் ஜனாதிபதி செயலகம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. அங்கு அரச ஊழியர்களுக்கு கடமைகளை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. அது நாட்டின் நிர்வாகம் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் இடமாகும். இவ்வாறான இடத்தில் இடையூறுகள் ஏற்படுமாயின் நாம் அதனை பாதுகாக்க வேண்டும். முன்னர் ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு தூதுக்குழுக்கள் நாட்டுக்கு வந்த பின்னர் ஜனாதிபதி மாளிகையிலேயே ஜனாதிபதியுடன் தூதுவர்களுடன் உரையாடுவார்கள்.அவர்கள் அங்கு செல்வதற்குக்கூட முடியவில்லை என்றால் அது நாட்டின் பாதுகாப்பு நிலையையே எடுத்துக்காட்டும்.. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர்களின் ஒத்துழைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய தடையாக அமையும். இதன் காரணமாக கொழும்பு நகருக்குள் மிகவும் சொற்ப்ப இடங்களில் மாத்திரமே நாம் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாதுகாப்பு வலையமாக குறிப்பிட்டுள்ளோம் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.