மகளிருக்கான இலவச பஸ்சில் ஏற்றி மூதாட்டியை கட்டண டிக்கெட் எடுக்க வைத்து அதிமுகவினர் அவதூறு வீடியோ; நடவடிக்கை எடுக்கப்படுமா? எஸ்பி விளக்கம்

கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகம் செய்தார். அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோவை மதுக்கரை பிரித்விராஜ் (40). மதிவாணன் (33) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து பாலத்துறைக்கு புறப்பட்ட அரசு டவுன் பஸ்சில் துளசியம்மாள் (70) என்பவரை ஏற்றினர். பிரித்விராஜ், மதிவாணன் மற்றும் அதிமுகவை சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர் பின் தொடர்ந்தனர். பஸ் சிறிது தூரம் சென்றதும் கண்டக்டர் இலவச டிக்கெட்டை மூதாட்டிக்கு தர வந்தபோது, அவர் ஓசி டிக்கெட் வேண்டாம். கட்டண டிக்கெட் வேண்டும் என்று பணத்தை நீட்டினார். கண்டக்டர் மூதாட்டியிடம் கட்டணமில்லா பேருந்து பயணம் குறித்து கூறினார்.

ஆனால், அவர் காதில் வாங்காமல் டிக்கெட் தரும்படி கேட்கவே பணத்தை பெற்று டிக்கெட்டை கொடுத்தார். இதனை உடன் சென்ற அதிமுகவினர் வீடியோ எடுத்தனர். பின்னர், அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். பஸ்சில் எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்ட அதிமுகவினர் குறித்து கோவை எஸ்பி அலுவலகத்தில் திமுகவினர் புகார் அளித்தனர். மதுக்கரை நகர திமுக செயலாளர் ராமு மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கூறுகையில்,“பெண்களுக்கான இலவச பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி தொடர்பான வீடியோ விவகாரத்தில் இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக தவறான தகவல் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.  இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.