50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தமிழக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்டு கொண்டு வர நடவடிக்கை

தஞ்சாவூர்: மன்னார்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 2 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலைகளை மீட்டு கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வேணுகோபாலசாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையில், அந்த 3 சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு போலீசார், கோயிலில் இருந்த மற்ற சிலைகளை சரி பார்த்ததில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகள் ஆகிய இரண்டு சிலைகளும் போலியானவை என்றும், உண்மையான சிலைகள் திருடி கடத்தப்பட்டது என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான போலீசார், சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

கோயில் அதிகாரிகளிடமோ, பிற பதிவேடுகளிலோ அசல் சிலைகளின் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள பிரென்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி நிறுவனத்தில் திருடப்பட்ட சிலைகளின் படங்கள் கிடைக்கிறதா என ஆய்வு செய்ததில், சிலைகளின் படங்கள் கிடைத்தன. இதில் அந்த படங்களை பெற்ற பிறகு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களின் வலைதளங்களில் கிடைக்கப்பட்ட படங்களுடன் ஒத்த சிலைகளை தேட ஆரம்பித்தனர். இந்த தேடுதலின் பலனாக அமெரிக்காவின் கன்சாஸ்சிட்டி, மிசோரி , நெல்சன் அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் கோயிலில் காணாமல் போன யோக நரசிம்மர் , விநாயகர் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரண்டு சிலைகளையும் அமெரிக்காவில் இருந்து மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.