ஆசிரியர் நியமனத்திற்கு போட்டிப்பரீட்சை – கல்வி அமைச்சர் அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 200இற்கும் அதிகமானவர்கள் ,விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை. 180 பேர் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று படிப்பைப் பூர்த்தி செய்யாது இடையில் நிறுத்தியுள்ளார்கள். அத்துடன் பல்கலைக்கழகங்களில் 18மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் காணப்பட வேண்டும். ஆனால் 46 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்களே பணியாற்றுகின்றனர்..

இலங்கை போக்குவரத்து சபையில் ஒரு பஸ்ஸிற்கு 8 சாரதிகள் உள்ளார்கள். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏராளமான ஊழியர்கள் உள்ளார்கள். இந்நிலையில் மாணவர்கள் 18பேருக்கு ஒருவர் இருக்க வேண்டிய நிலையில் உயர் கல்வி அபிவிருத்தி அவசியமாகும். இந்நிலையில் அண்மையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் பெற்ற முதலாம், இரண்டாம் வகுப்புகளைப் பெற்ற பட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களின் அல்லது பட்டம் பெறாதவர்களின் வேலைகளைச் செய்கிறார்கள். சரியாக மேசை, கதிரை இல்லாமல் படித்த படிப்பை பயன்படுத்த வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள் இந்நிலையில் நாட்டின் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்வது பற்றிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாது என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் பெரேரா கேட்ட வாய்மொழி மூலமான வினாவுக்கு விடையளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதற்கிணங்க போட்டிப் பரீட்சை ஊடாக ஆசிரியர் சேவைக்கு ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக் கிடைப்பதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் முதலாம் தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், தமது பல்கலைக்கழகப் பீடங்களுக்கு உள்வாங்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். தத்தமது பல்கலைக்கழகப் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர் சபையின் வெற்றிடங்களின் எண்ணிக்கையை அடையாளம் கண்டுள்ளதாகவும் மற்றும் அவற்றை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2010ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை வெளிநாட்டுப் பட்டப்பின் படிப்பிற்காக 2,423 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், இலங்கை பௌத்த பல்கலைக்கழகத்தில் 15விரிவுரையாளர்களும், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் 19 விரிவுரையாளர்களும், மொத்தமாக 2,457 பேர் வெளிநாட்டுப் பட்டப்பின்படிப்பிற்கான வாய்ப்புக்கிடைக்கப் பெற்றுள்ளனர் என்ற தகவலையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.