மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாட்டம் – அசத்திய அமைச்சர்

தூத்துக்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடிய அமைச்சர் கீதா ஜீவன் தீபாவளி கொண்டாடினார்.

தீபாவளி பண்டிகை நாளை தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி கொண்டாடும் நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தீபாவளி கொண்டாடுவது என்பது கேள்விக்குறிதான். அதிலும் அநாதை ஆசிரமங்களில் தங்கி இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி என்பதே தெரியாத நிலைதான்.

இந்த நிலையில் தூத்துக்குடியை அடுத்துள்ள கூட்டாம்புளி கிராமத்தில் அமைந்துள்ள அன்பு ஆசிரமத்தில் 150க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கி உள்ளனர்.

image

இவர்கள் இந்த தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் அங்குள்ள அனைத்து மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள் வழங்கப்பட்டதுமின்றி, மூன்று வேளையும் உணவும் வழங்கப்பட்டது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமைச்சர் கீதா ஜீவன் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்.

image

அதனைத்தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. உற்சாகமாக பாடலுக்கு நடனமாடிய மாற்றுத்திறனாளிகளை அமைச்சர் கீதா ஜீவன் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்.

image

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ’’மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்கும் அரசாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அரசு திகழ்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் எட்டு நகரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் மையங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்’’ எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் அன்பு ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.