ஏழாவது ஆயுள்வேத தின நிகழ்வுகள்

ஏழாவது ஆயுள்வேத தினத்தைமுன்னிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் “எங்கும் எந்நாளும் ஆயுள்வேதம்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பொலிசாருக்கான விசேட கண்காட்சி ஒன்றினை 2022 ஒக்டோபர் 22ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

சிறந்த ஆரோக்கியம் மற்றும் சிறந்த வாழ்க்கைக்காக, ஆயுள்வேதம் தொடர்பான விழிப்புணர்வினை பரப்புதல் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தன.

 2.         இந்த கண்காட்சியில் இலங்கைக்கான பதில் இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ வினோத் கே ஜேக்கப் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். தீபாவளி மற்றும் தந்தேரஸ் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டிருந்த பதில் உயர் ஸ்தானிகர், மருத்துவத்தின் ஒரு முழுமையான பொறிமுறையாக ஆயுள்வேதத்தின் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன் சூழலிலும் உடலிலும் அமைதியை மேம்படுத்த ஆயுள்வேதம் உந்துசக்தியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 3.    இலங்கை தேசிய பொலிஸ் அக்கடமியின் பிரதிப் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல அமரசிங்கே அவர்கள் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச மருத்துவத் துறையின் வைத்திய நிபுணரும் ஆயுள்வேத மருத்துவப் பேராசிரியருமான டாக்டர்.பத்திரகே கமல் பெரேரா அவர்கள் துறைசார் நிபுணராக இந்நிகழ்வில் கலந்துகொண்டார். ஆயுள்வேத சிகிச்சை முறைகளில் உணவு முறைகள், மூலிகைகள் மற்றும் வாசனைப் பொருட்கள்  ஆகியவற்றின் வகிபாகம் தொடர்பாக தெரிவித்திருந்த அவர், ஒரு முழுநிறைவான வாழ்க்கை முறையினை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட மேலைத்தேய மருத்துவத் துறைசார்ந்த பல்வேறு அமைப்புகள் ஆயுள்வேதம் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன என்றும் தெரிவித்தார். புகழ்மிக்க ஆயுள்வேத நிபுணர்களான திருமதி ருவி ரொட்ரிகோ மற்றும் டாக்டர். அமில விக்ரமசிங்க ஆகியோர் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமது கருத்துகளை முன்வைத்தனர். இக்கண்காட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இலங்கைப் பொலிசார் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 4.    மருத்துவம் மற்றும் சத்திரசிகிச்சை குறித்த புராதன சமஸ்கிருத நூலான சுஸ்ருதா சம்ஹிதாவில் ஆயுள்வேதத்தின் இறைவனாக கூறப்பட்டிருக்கும் தன்வந்திரி பெருமானின் பிறந்த நாளினையும் குறிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் தன்வந்திரி ஜெயந்தி (தந்தேரஸ்) தினத்தன்று ஆயுள்வேத தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதேவேளை தீபத் திருநாளான தீபாவளிக்கு முன்னதான முதல் ஐந்து நாட்களில் முதலாவது நாளாகவும் குறித்ததினம் அமைகின்றது.

 5.    இந்திய அரசாங்கத்தின் ஆயுள்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி அமைச்சு (ஆயுஷ்) மற்றும் இலங்கையின் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஆகியவை சுதேச மாற்று மருத்துவத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கொவிட்-19 பெருநோய்க்கு பின்னர் சிறந்த ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கொரோனோ வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும் இருஅமைச்சுகளும் வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

25 ஒக்டோபர் 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.