பார்க்கின்ஸன்ஸ்! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கையில் நடுக்கம் மெதுவாகத் தான் பலராமனுக்கு ஆரம்பமானது.

அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. முதலில் இடது கையில் ஆரம்பித்து பின்னர் வலது கைக்கும் பரவியது.

டாக்டர் டோமினிக் சொல்லிவிட்டார்,” இது கட்டுப் படுத்த முடியும்.ஆனால் நிரந்தர திர்வு காணமுடியாது. கூட வாழ பழகிக் கொள்ளுங்கள்.”

பார்க்கின்ஸன்ஸ்

பலராமனுக்கு தன் பெயர் வைத்த பெற்றோர் மேல் தான் கோபம் வந்தது. பெயரில் மட்டும் பலம் இருந்தால் போதுமா. நிலைமை இப்படி ஆகி விட்டதே.

பலராமன் கடவுளை சபிக்காத நாளே இல்லை.”பாழாய் போன பார்க்கின்ஸன்ஸ்”

பலராமனின் மனைவி இறந்து வருடங்கள் ஆகி விட்டன. அவர் உதவிக்கு தூரத்து உறவு சேது மட்டும் தான்.அவர் கூடவே தங்கி சமைத்து, எல்லாம் சேது தான். அவரின் ஒரே மகள் ரேகா மேல் படிப்புக்கு அமெரிக்கா சென்றவள் அங்கேயே கூடப்படித்த ஒரு வடக்கத்திய பையனை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டாள்.

ஞாயிற்று கிழமைகளில் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப்பில் பேத்தி அஷ்மிதாவுடன் பலராமன் பேசுவார். அவர் வாழும் மற்ற ஆறு நாட்களும் அந்த ஞாயிற்று கிழமை ஒரு மணி நேரத்துக்கு தான்.

பலராமன் பெயரில் ஒரு கிரௌண்ட் காலி நிலம் இருந்தது. எப்பொழுதோ வாங்கிப் போட்டிருந்தார். ரேகா தனக்கு வேண்டாமென்று சொல்லிவிட்டாள்.

அதை விற்று பேத்தி அஷ்மிதாவிற்கு அனுப்பிவிடவேண்டும் என்பதே பலராமனின் ஆசை.

உடம்பு இன்னும் கெடுவதற்கு முன் அதை செய்து முடித்துவிட நினைத்தார் பலராமன்.

நல்ல விலை அமைந்து வந்தது.

காப்பிட்டல் கெயின் போக ஒரு கோடியே அறுபத்தெட்டு லட்சம். அக்கௌண்டில் வரவு வைத்தாகி விட்டது. அப்படியே அஷ்மிதா பெயருக்கு மாற்றி விடவேண்டியது தான்.

ஆடிட்டரை ஆலோசனை செய்தார். பணம் அனுப்ப வழி இருந்தது எல்.ஆர்.எஸ் மூலமாக.

சேது இதை எல்லாம் கவனித்துக் கொண்டே இருந்தான். இவ்வளவு நாளும் மாமா மாமா, என்று ஒட்டி உறவாடி விட்டு பின்னர் வெறுங்கையாய் போவதா. அவனுக்கு தெரியும் பலராமன் வீடும் அவன் பெயருக்கு வரப் போவதில்லை. இப்பொழுது அந்த ஒரு கோடியே சில்லறை லட்சங்களும் யாரென்றே தெரியாத அஷ்மிதாவிற்காம். சேதுவால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

”நல்ல நேரம் வரும் சேது. கொஞ்சம் பொறுமை” சேது தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.

Representational Image

அந்த நல்ல நேரமும் அடுத்த  நாளே வந்தது. 

பலராமன் வங்கி செயல்பாடுகளுக்கு நவீன உத்திகளை கையாளுவதில்லை. ஏடிஎம், நெட் பாங்கிங் எல்லாம் தூரவே வைத்திருந்தார். இன்னும் மானுவல் பாங்கிங் தான்  பலராமனுக்கு. 

செக் புத்தகத்தை பீரோவிலிருந்து எடுத்த பொழுது முதன் முறை கீழே விழுந்தது. கை நடுக்கம் அதிகமாகி விட்டது.

சிரமப்பட்டு ஒரு செக்கை எழுதினார் பலராமன். செக்கின் பின்புறமும் கையெழுத்திட்டார்.

பலராமன் செய்திருந்த ஒரு நல்ல காரியம் என்னவென்றால் அவர் கை நடுக்கம் எடுக்க ஆரம்பித்தவுடனேயே பாங்கில் தன் மாறிய கையெழுத்தை பதிவு செய்து கொண்டிருந்தார். எனவே பணம் எடுப்பதில் சிரமம் எதுவுமிருக்காது.

கை நடுக்கம் இன்று அதிகமாய் இருந்தது.

செக்கை கிழிக்க முடியவில்லை. சேதுவை கூப்பிட்டார் பலராமன்.

“சேது இந்த செக்கை கொஞ்சம் கிழிடா. பாழாய் போன கை நடுக்கம். முடியலே”

சேது அப்பொழுது தான் அதை செய்தான்.

ஒரு செக்கிற்கு பதில்  அடுத்திருந்த செக் இதழையும் சேர்த்து கிழித்துக் கொண்டான். பலராமனும் அடுத்த செக் கிழிந்ததை, தவறிய செக் நம்பரை கவனிக்கவில்லை.

சேது சமையலுடன் வேறு சில காரியங்களையும் நன்கு கற்றுக் கொண்டிருந்தான். நன்கு பாட்டு பாடுவான். அசப்பில் மனோ பாடுவது போலவே இருக்கும். நன்கு படம் வரைவான். 

மாமா பலராமன் மற்ற எல்லா விஷயங்களில் சேதுவை நம்பினாலும் பண விஷயத்தில் சற்று தூரமாகவே வைத்திருந்தார்.

ஆனால் இன்று பலராமனால் முடியவில்லை.

“சேது இன்னைக்கு பாங்குக்கு போய்ட்டு வந்துடுடா”

அதற்கெனவே காத்திருந்த சேது பக்கத்தில் இருந்த பாங்குக்கு  நடந்தே போனான்.

போகும் வழியில் இருந்த ஸெராக்ஸ் கடையில் பலராமன் கையெழுத்து போட்டிருந்த செக்கை ஒரு நகல் எடுத்து பத்திரப் படுத்திய சேது பாங்கில் இருந்து பணம் எடுத்து வந்து பலராமனிடம் கொடுத்து விட்டான்.

அடுத்து செக் நகலை வைத்து இரண்டு மூன்று முறை பரிட்சித்து பார்த்தான் சேது. கையெழுத்து பழகி விட்டது. பலராமனின் கையெழுத்தை போட கற்று கொண்டான் சேது.

சேது முடிவெடுத்து விட்டான். 

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. ஆம். புதன்கிழமை தான் தோதான நாள்.

புதன் காலையிலிருந்தே சோர்ந்து காணப்பட்டான் சேது. பலராமன் மீண்டும் மீண்டும் சேதுவை விசாரித்தார்,”என்னடா? உடம்பு ஏதாவது பண்ணுதா?”

“ஆமாம் மாமா. ஜுரம் மாதிரி தெரியுது”

பலராமன் நடுங்கும் விரல்களால் சேதுவிற்கு இருநூறு ரூபாய் கொடுத்தார். ”முதல்லே டாக்டர் கிட்டே போய்ட்டு வந்துருடா”

வெளியில் வந்த சேது நார்மல் சேதுவாகி விட்டான்.

கையோடு வைத்திருந்த செக்கை எடுத்துக் கொண்டு பாங்க் விரைந்தான் சேது.

சேது பாஸிட்டிவ் பே சிஸ்டம் பற்றி அறிந்திருந்தான். பத்து லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் வாடிக்கையாளர் அதை உறுதி செய்ய வேண்டும். 

“முதலில் பாஸிட்டிவ் பே வேண்டாம். ஒன்பது லட்சம் போதும். மாமா அதை பெரிது படுத்த மாட்டார்”

வங்கிக்குள் முதல் ஆளாக நுழைந்தான் சேது.

Representational Image

அவன் செக்கை வாங்கிய அந்த பெண் செக்கின் பின்புறம் சேதுவின் இன்னொரு கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.

ஏசி காற்று அனுபவித்து உட்கார்ந்திருந்தான் சேது.

“இன்னும் பத்து நிமிடம் தான். அப்புறம் இந்த வேட்டி சட்டை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஹைதராபாத் போய்விட வேண்டியது தான்”

பத்து நிமிடம் அரை மணியாயிற்று. பணம் வரவில்லை.

சேது சற்று பொறுமை இழந்தான். 

மேலாளரின் அறையினுள் நுழைந்தான் சேது. அவர் யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். சேதுவைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்திவிட்டு அவர் முன் அமரச் சொன்னார்.

“சொல்லுங்க”

“ஒன்பது லட்சம் பேமெண்ட் சார்?”

“கொஞ்சம் காஷ் கம்மியாய் இருக்கு. வந்துடும். ஒரு பத்து நிமிடம்”

“வந்துடுச்சு”

கதவு திறந்தது. பலராமன் உள்ளே நுழைந்தார். அவர் பின்னால் போலீஸ் இருவர்.

திடுக்கிட்டு எழுந்தான் சேது.

எங்கே தவறு? ஒன்றும் புரியவில்லை.

பலராமன் கால்களில் விழுந்து ,”மாமா தப்பு நடந்துடுச்சு மாமா. இந்த தடவை மன்னித்து விட்டுடச் சொல்லுங்க மாமா” கெஞ்சினான் சேது.

பலராமன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

போலீஸ் சேதுவை இழுத்துச் சென்றது.

மேலாளரிடம் பலராமன் கேட்டார்,” எப்படி கண்டுபிடித்தீர்கள் சார்?”

மேலாளர் காஷியர் இந்துவை அழைத்தார்.

“இந்து தான் இந்த ஃப்ராடை கண்டுபிடித்தாள். அவளிடமே கேளுங்கள்”

இந்து பலராமனிடம் சொன்னாள்,” சார் உங்கள் கையெழுத்தில் ஒரு நடுக்கம் தெரியும். இந்த செக்கில் இருக்கும் கையெழுத்து பாருங்கள் நடுக்கம் சிறிதும் இல்லாமல் தெளிவாக இருக்கிறது”

பலராமன் தனக்குள் சொல்லிக்கொண்டார்,”நன்றி பார்க்கின்ஸன்ஸ்”.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.