மோடிஜி பாசம்… கடைசில அவர் கையாலே பட்டம்… இளையராஜா செம ஹேப்பி!

திண்டுக்கலில் உள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டம் வழங்கியதை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் வழங்கப்பட்டது. மேடையில் புன்னகை பூத்த முகத்துடன் ஏறி வந்த இளையராஜாவை கையெடுத்து கும்பிட்டு பிரதமர் மோடி வரவேற்றார்.

பின்னர் அவருக்கு டாக்டர் பட்டத்திற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது இளையராஜா சில வார்த்தைகள் பேச, பதிலுக்கு பிரதமர் மோடியும் புன்னகை பூத்தவாறே பேசினார். எப்படியும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருப்பர். அடுத்தகட்ட செயல்பாடுகள் சிறப்பாக அமைய வேண்டும். உங்களுக்கு வேண்டியதை அரசு நிச்சயம் செய்யும் என பேசியிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் மீம்ஸ்களும் தெறிக்க ஆரம்பித்துவிட்டன. கவுரவ டாக்டர் பட்டம் வாங்கிய பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நின்று இளையராஜா சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார். அவரும் புன்னகையுடன் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் இளையராஜாவை வைத்து பெரிய சர்ச்சை வெடித்தது. அப்போது, ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதினார்.

அதில் பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இந்தியா மீது பெரிய கனவு கண்டவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடுமையான எதிர் வினைகள் கிளம்பின.

ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு அடிபோடுகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவையெல்லாம் புரளி. மனதில் பட்டதை பேசியிருக்கிறார் என்று அவருக்கு ஆதரவாக ஓடிவந்து கருத்து சொன்னது தமிழக பாஜக. அதேசமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் 2017ல் போட்டியிட்டவர் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் என்பது கவனிக்கத்தக்கது.

அவரைத் தொடர்ந்து இளையராஜாவை வைத்து அரசியல் காய்களை நகர்த்த பார்க்கிறது பாஜக என்ற பேச்சு அடிபட்டது. அதுமட்டுமின்றி இளையராஜா சார்ந்த சமூக வாக்குகளை பெறுவதற்கு அக்கட்சி முயற்சிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜூலையில் இளையராஜாவிற்கு ராஜ்ய சபா நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டது.

இதை வைத்து பல்வேறு விதமான அரசியல் விஷயங்கள் பேசப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி கையால் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இது இளையராஜாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.