ரியல் எஸ்டேட் அதிபர் நடத்திய கிடா விருந்தில் துப்பாக்கிச்சூடு: போதையில் வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு

திருமங்கலம்: ரியல் எஸ்டேட் அதிபர் நடத்திய கிடா விருந்தின் போது, மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம், காட்டு பத்திரகாளியம்மன் கோயிலில் டி.கொக்குளத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனசேகர் என்பவர் நேர்த்திக்கடனாக நேற்று கிடா விருந்து வைத்தார். இதில் இவரது நண்பர்கள் மதுரை, உச்சபரம்புமேட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேதகிரி, திருமங்கலம் அருகே தொட்டிபட்டியை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விருந்திற்கு வந்தவர்கள் கோயிலுக்கு பின்புறம் நான்குவழிச்சாலையை ஒட்டியுள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் வேதகிரி, கணபதி ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், வேதகிரி காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடினர். தகவலறிந்து திருமங்கலம் டவுன் போலீசார் சென்று விசாரித்தனர். இதையறிந்த வேதகிரி தப்பியோடிவிட்டார். கிடா விருந்து வைத்த தனசேகர், உதவியாளர் சக்திவேலு மற்றும் கணபதி ஆகியோரை பிடித்து டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். வேதகிரியை தேடி வருகின்றனர்.

கிடா விருந்தின் போது ஏற்பட்ட தகராறில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்த திருமங்கலம் கோட்டாட்சியர் சவுந்தர்யா, தாசில்தார் சிவராமன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.