ஊழல் புகார் தெரிவிக்க மொபைல் எண் அவசியம்| Dinamalar

புதுடில்லி மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் லஞ்ச புகார் தெரிவிப்போர், தங்கள் மொபைல் போன் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருந்த விதிமுறைகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது, மத்திய லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

இந்நிலையில், புகார் தெரிவிக்கும் நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் கூறப்பட்டு உள்ளதாவது:

மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து, பொதுமக்கள், www.portal.cvc.gov.in மற்றும் www.cvc.gov.in ஆகிய மத்திய லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் இணையதளங்களில் புகார்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு புகார் செய்வோர், தங்கள் மொபைல் போன் எண்ணையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்; இந்த எண் ரகசியமாக வைக்கப்படும்.

புகார் தெரிவிப்பவரின் விபரங்களை உறுதி செய்வதற்காக, அவரது மொபைல் எண்ணுக்கு ரகசிய குறியீடு எண் அனுப்பப்படும்.

புகார் பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில், அதை உறுதி செய்வதற்கான தகவல் அனுப்பப்படும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை வைத்து, புகார் எந்த நிலையில் உள்ளது; அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன என்ற விபரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள முடியும்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் அதிகாரியும், இது தொடர்பான தகவலை புகார்தாரருக்கு போன் வாயிலாக தெரிவிப்பார்.

புகாரை பரிசீலிப்பதற்கான காலக்கெடு, ஒரு மாதத்திலிருந்து இரண்டு மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய லஞ்சம் மற்றும்ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையத்தின் முகவரிக்கு, கடிதம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.