காதலியை 35 துண்டாக வெட்டிய காதலன் மற்றொரு பெண்ணுடன் காதல் களியாட்டம்| Dinamalar

புதுடில்லி புதுடில்லியில் காதலியை கொலை செய்த காதலன், துண்டு துண்டாக வெட்டிய உடலை ப்ரிஜில் வைத்து விட்டு, மற்றொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து காதல் களியாட்டத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அப்தாப் அமீன் புனேவாலா, 28. இவர், மும்பையில் பணியாற்றியபோது ஷ்ரத்தா, 26, என்ற பெண்ணை காதலித்தார்; ஷ்ரத்தாவும் அவரை காதலித்தார்.

கருத்து வேறுபாடு

இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஷ்ரத்தாவும், அப்தாபும் மும்பையை விட்டு வெளியேறி, புதுடில்லியின் மெஹ்ராவ்லி பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக தங்கியிருந்தனர்.

அடுத்த சில நாட்களிலேயே அப்தாபுக்கும், ஷ்ரத்தாவுக்கும் திருமண விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த மே 18ம் தேதி ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை, 35 துண்டுகளாக வெட்டி ப்ரிஜில் வைத்தார்.

அடுத்த 18 நாட்களுக்கு தினமும் அதிகாலை 2:00 மணிக்கு எழுந்து, ஒவ்வொரு நாளும், உடலின் ஒவ்வொரு பாகமாக எடுத்து, புதுடில்லியின் பல்வேறு இடங்களில் வீசி எறிந்தார்.

ஷ்ரத்தாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்தாப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், புதுடில்லி மெஹ்ராவ்லி பகுதியில் ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசி எறியப்பட்ட இடங்களுக்கு அப்தாபை போலீசார் நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அங்கு ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை சேகரித்த போலீசார், அவற்றை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஷ்ரத்தா கொலை செய்யப்பட்ட பின், தன் வீட்டுக்கு வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து, அப்தாப் தங்க வைத்தது தெரியவந்துள்ளது. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ப்ரிஜில் இருக்கும்போதே, அந்த பெண்ணை, அப்தாப் அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ப்ரிஜில் உடல் பாகங்கள் இருந்தால், அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால், அவற்றை அப்தாப் ஒரு அலமாரியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இது தவிர, வேறு பெண்கள் யாராவது வீட்டுக்கு வந்தனரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

‘லவ் ஜிகாத்’ காரணமா?

ஷ்ரத்தாவின் தந்தை கூறுகையில், ‘லவ் ஜிகாத் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம்’ என்றார். இது குறித்து மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரிராஜ் சிங் கூறியதாவது:

மும்பை பெண் கொலை செய்யப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. நம் நாட்டில், ‘லவ் ஜிகாத்’ ஒரு அமைப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஹிந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வதும், பின் அவர்களை பரிதவிக்க விடுவது அல்லது கொலை செய்வது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. எனவே இந்த கொலைக்கு, ‘லவ் ஜிகாத்’ காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.