“மத்திய அரசு யானை பசிக்கு சோளப் பொறி போல் தமிழகத்துக்கு நிதி அளிக்கிறது” – ஜெயக்குமார் சாடல்

சென்னை: தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கியிருக்கின்றன. 2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை 7 ஆயிரம் கோடி தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஒக்கி புயல், வர்தா புயல், மிக்ஜாம் புயல் என பல்வேறு புயல்கள் சென்னை மற்றும் தமிழகத்தை தாக்கியிருக்கிறது.

2015-ல் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், மத்திய அரசிடம் நாம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை 7 ஆயிரம் கோடி ரூபாய் தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது. மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகள் அதாவது காங்கிரஸ், பாஜக என யாராக இருந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள். யானை பசிக்கு சோளப் பொறி என்பது போல் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.

வடமாநிலங்களில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்தால் அவர்களுக்கு நிதியை வாரி வழங்குகிறார்கள். தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது. தமிழக மக்கள் வரி கொடுப்பதில்லையா?… தமிழக மக்களின் வரிப்பணத்தை சரிசமமாக பகிர்ந்து கொடுங்கள். வடக்குக்கு ஒரு நீதி தெற்குக்கு ஒரு நீதி என இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தேசிய கட்சிகளால் ஒரு பிரயோஜனமும் கிடையாது.

பல ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக அரசு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அதன் அடிப்படையில் ஒரு நிதி பகிர்வு சீரான வகையில் இருக்கும் ஒரு சட்டத்தை கொண்டு வந்திருந்தால் அந்தப் பங்கு சரியாக தமிழகத்துக்கு கிடைத்திருக்கும். மாநில உரிமைகளை காப்போம், தமிழ்நாட்டு மக்களை காப்போம் என மு.க ஸ்டாலின் கோஷமிட்டு வருகிறார். தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்ய போகிறாராம். இதைக் கேட்கும் போது கேலிக்கூத்தாக இருக்கிறது. மாநில தன்னாட்சியை பேணி காப்பதற்கு அன்றே இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் தவறவிட்டு விட்டார்கள்.

இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.,க்கள் தமிழக மக்களின் உரிமையை மீட்டுத் தர குரல் கொடுப்பார்கள்.ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. தமிழக மக்களின் உரிமையை காப்போம் என்பதுதான் எங்களுடைய கோஷம்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.