”மாசம் ஒருமுறைதான் டார்கெட்; திருடிய நகையை வெச்சு..” – யார் இந்த சென்னையின் ராபின் ஹுட்?

திருட்டு சம்பவங்கள் பல ரகங்களில் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சென்னையில் சாலை ஓரத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் மாதம் ஒரு முறை வீடுகளில் புகுந்து திருடி இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை பல ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறார்.
அர்ஜுன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தால் ஈர்க்கப்பட்டிருப்பார் போல இருக்கிறது. அந்த படத்தில், கதாநாயகனான அர்ஜுன் பணக்காரர்களின் செல்வங்களை கொள்ளையடித்து ஏழை எளிய மக்களுக்கு உதவுவார். இதே பாணியைதான் சென்னையின் ராபின் ஹுட்டாக இருந்த அந்த நபர் கையாண்டு வந்தவர் அண்மையில் ஈடுபட்ட திருட்டு சம்பவத்தால் அந்த நபர் வசமாக சிக்கியிருக்கிறார்.
அதன்படி, சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான வரதராஜன். தனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். டிஸ்சார்ஜ் ஆனதும் வீடு திரும்பிய வரதராஜனுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஏனெனில் வீட்டில் கதவு உடைக்கப்பட்டும், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகள் களவாடப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறார்.
image
உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, திருட்டு நடந்த வரதராஜனின் வீட்டுக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்ததில் எழும்பூரில் சாலையோரத்தில் வசித்து வந்த 33 வயதான அன்புராஜ் குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து 10 நாள் தீவிர தேடலுக்கு பிறகு குற்றப்பிரிவு போலீசார் அன்புராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அப்போதுதான் மேற்குறிப்பிட்ட விவரங்கள் அம்பலமாகியிருக்கிறது. அதில், கடந்த நான்கு மாதத்தில் பெங்களத்தூர் பகுதியை சுற்றி இருக்கும் மாதம் ஒரு வீடு என 4 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டதும், இதுபோல கடந்த 10 ஆண்டுகளாக எழும்பூரில் இருந்து மின்சார ரயிலில் வந்து தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வந்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்று அதை விற்று பணமாக்கி, சாலையோரம் மற்றும் ரயில் நிலையங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்காக செலவிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து கைதான அன்புராஜிடம் இருந்து 11 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டு, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதனிடையே, ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ததற்காக சிறைக்கு போவதில் தனக்கு எந்த கவலையும் இல்லை என அன்புராஜ் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.