சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், இந்த மாதம் கொரோனா தொற்று மளமளவென உயர்ந்து, தினசரி 25 ஆயிரம் பாதிப்புகள் வரை பதிவாகி வருகிறது.

இருப்பினும் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. சீனாவில் கடைசியாக கடந்த மே 26-ந்தேதி கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். அதன் பிறகு கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அங்கு கொரோனா உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

இந்நிலையில் இன்று சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,227 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. ஏனெனில் ஷாங்காய் நகரில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கொரோனா பரவல் ஏற்பட்ட போதிலும், அங்கு கொரோனாவால் ஒரு சில உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.

கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகளை இதயக்கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்ட மற்ற உடல்நல பாதிப்புகளாக சீன சுகாதாரத்துறை பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை சீன அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.