திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: என்னென்ன முன்னேற்பாடுகள்? – சேகர் பாபு விளக்கம்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய பண்டிகையன்று வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படும். அந்த தீப ஒலிகள் தீய சக்திகளை விரட்டும் திறன் கொண்டவை என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படவுள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.

இந்தாண்டு வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவுள்ள நிலையில் 6 ஆம் தேதி மாலை மெகா தீபம் ஏற்றப்படும். இந்த முறை திருவண்ணாமலைக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அங்கு என்னென்ன முன்னேற்பாடுகள் நடந்துள்ளது என்பதை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

அதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு திருவண்ணாமலை கோயிலின் நான்கு கோபுரங்களையும் சுத்தம் செய்துள்ளோம். 30 லட்சம் பக்தர்கள் வருவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்கவும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலைக்கு வர கூடுதலாக 2000 பேருந்துகளை இயக்க முதல்வரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி சார்பில் வெளியில் இருந்தும் தூய்மை பணியாளர்களை ஏற்பாடு செய்துள்ளோம். போக்குவரத்தை சரி செய்ய சுமார் 4 ஆயிரம் காவலர்களை ஏற்பாடு செய்துள்ளோம். தீ விபத்து ஏற்படாமல் தடுக்கவும், சரி செய்யவும் 60 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.

மேலும், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு துறை சார்பில் 5 இணை ஆணையர்கள், உதவி ஆணையர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளோம் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.