தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதியிருந்த நிலையில், சட்டத்துறை மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது.

அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது  தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், இதற்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாகவே சட்டத்துறை உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்திருக்கக் கூடிய நிலையில் ஆளுநர் ஆண்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தின்படி, ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்களிலும், செயலிகளிலும் இதுதொடர்பான விளபங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறினால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழக்கும் பலதரப்பட்ட மக்களும் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.இப்படி தொடர்ச்சியாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி தமிழ்நாடு அரசிடம் பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.