மாத்திரை போல் நாணயங்களை விழுங்கிய முதியவர்… வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அகற்றம்!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கி தாலுகா, சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன் (வயது 60). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த திம்மப்பா தினமும் மதுகுடித்து வந்தார்.

இந்த நிலையில் திம்மப்பா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிப்புக்கு ஆளானார். இதன் விளைவாக அவர் நாணயங்களை மாத்திரையை போல விழுங்கி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக திம்மப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது திம்மப்பாவின் வயிற்றில் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது வயிற்றில் இருக்கும் நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இல்லையென்றால் திம்மப்பா உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். இதையடுத்து திம்மப்பா பாகல்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் வயிற்றில் இருந்த நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், திம்மப்பா வயிற்றில் இருந்து 187 நாணயங்களை அகற்றினர். அந்த நாணயங்கள் ஒரு கிலோ எடையில் இருந்தன. திம்மப்பாவின் வயிற்றில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் 56. 2 ரூபாய் நாணயங்கள் 51, 1 ரூபாய் நாணயங்கள் 80 என மொத்தம் 187 நாணயங்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சில நாட்க்ள் சிகிச்சை பிறகு அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுவயதில் குழந்தைகள் 50 பைசா, ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடும்போது அவற்றை விழுங்கிவிடும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்வதுண்டு. இதேபோன்று பள்ளிப் பருவ மாணவர்கள்பலப்பம் வைத்து கொண்டு விளையாடும்போது கவனக் குறைவாக மூக்கின் வழியாக அதனை உறிஞ்சும்போது அது சுவாசக் குழாய் வரை சென்று விபரீதமான சம்பவங்களும் உண்டு.

ஆனால, நான்கு மகன்கள், ஒரு மகள் என ஐந்து பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய ஒரு முதியவர், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர கிட்டதட்ட 200 நாணயங்களை விழுங்கும் அளவுக்கு அவரின் பிள்ளைகள் எப்படி கவனக்குறைவாக இருந்தனர் என்ற அதிர்ச்சியும், கோபமும் கலந்த கேள்வி, பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது.

அதேசமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர், அறுவை சிகிச்சையின் விளைவாக உயிர் பிழைத்துள்ளதால் அவருக்கு ஆயள் கெட்டி என்றும் மகிழ்ச்சியும், பெருமிதத்துடன் கூறி வருகின்றனர் திம்மப்பாவின் உறவினர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.